இந்தியாவின் பாணியில் இந்திய பேட்ஸ்மேன்களை காலி செய்த ஆஸி., ஸ்பின்னர்கள்… 109 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!

0
394

ஆஸி., ஸ்பின்னர்களின் சுழலில் சிக்கி சின்னபின்னமான இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. மைதானம் வறட்சியாக இருப்பதால் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்தார்.

- Advertisement -

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் நன்றாக துவங்கினாலும் அதை பெரிய ஸ்கோராக எடுத்துச் செல்ல முடியாமல் 21 ரன்களுக்கு அவுட் ஆனார்.

அனுபவ வீரர் புஜாரா நேதன் லயன் வீசிய பந்தில் மிகப்பெரிய டர்ன் ஆனதால் போல்ட் ஆகி ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். ஜடேஜா நான்கு ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது நட்சத்திர வீரர் விராட் கோலி சிறிது நேரம் நிலைத்து ஆடினார். அவரும் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. டாட் மர்ஃபி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 22 ரன்களுக்கு அவுட்டானார். இந்திய அணியால் நூறு ரன்கள் எட்டுவதை கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

பின்னர் பரத் 17 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் மூன்று ரன்கள் அடித்து வெளியேற, இந்திய அணி 88 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் காணப்பட்டது.

அடுத்ததாக உள்ளே வந்த உமேஷ் யாதவ், 2 சிக்சர் ஒரு பவுண்டரி என வானவேடிக்கை காட்ட இந்திய அணி 100 ரன்களை கடந்து நிம்மதி பெருமூச்சு விட்டது. அவரும் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் குன்னமென் டெஸ்ட் அரங்கில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அனுபவ வீரர் நேதன் லயன் மூன்று விக்கெட்டுகளும், மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் டாட் மர்ஃபி இரண்டு விக்கேட்களையும் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சில் சிக்கி இந்திய அணி ஆல் அவுட் ஆகியது.