327 ரன் 6 விக்கெட்.. இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவில் அசத்தல்.. சீனியர் அணிக்கு தக்க பாடம்

0
27191

சவுத் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியுடன், இந்திய ஏ அணியும், சவுத் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது. சவுத் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பான செயல்பாட்டால், இந்திய அணி போட்டியினை டிராவில் முடித்தது.

இந்நிலையில் சவுத் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மழை இடையூறுகள் இருந்த நிலையில், டாஸ்ஸில் வெற்றி பெற்று இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணியில், சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்ஃப்ராஸ் கான், திலக் வர்மா, துருவ ஜுரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நவ்தீப் சைனி, மற்றும் அவேஷ் கான் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

- Advertisement -

சவுத் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்ஸில், கேப்டன் மத்தேயு ப்ரீட்ஸ்கே, சினேதெம்பா கேஷிலே, மற்றும் ட்ஷெபோ மோரேகி சிறிய பங்களிப்புடன் 263 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் இந்திய ஏ அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்தனர். இந்திய ஏ அணியில் அவேஷ் கான் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அக்சர் படேல் 2 விக்கெட்களையும், நவ்தீப் சைனி, மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரஜத் படிதார், மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பாக 50 ரன்கள் கடந்தனர். இந்திய ஏ அணியின் ஸ்கோர் 81/1 என்ற நிலையில், சாய் சுதர்சன் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு சர்ஃப்ராஸ் கானுடன் இணைந்து விளையாடி வந்த ரஜத் படிதார் 33 ரன் களில், இந்திய ஏ அணியின் ஸ்கோர் 117/2 இருக்கும் போது ஆட்டம் இழந்தார்.

அதிரடியாக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் 40 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய ஏ அணி 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, திலக் வர்மா மற்றும் விக்கெட்கீப்பர் துருவ ஜுரல் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

திலக் வர்மா தனது அரை சதத்தை நிறைவு செய்தவுடன், துருவ ஜுரலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பாக சதத்தை பூர்த்தி செய்தனர். இந்திய ஏ அணியின் ஸ்கோர் 243 ரன்கள் இருக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டாக திலக் வர்மா 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த துருவ ஜுரல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆல்ரவுண்டர் அக்சர் படேல், மற்றும் துருவ ஜுரல் பார்ட்னர்ஷிப்பாக 50 ரன்களை கடந்தனர். இந்திய ஏ அணியின் ஸ்கோர் 292 ரன்களில், துருவ ஜுரல் 69 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் அரை சதம் எடுத்து அசத்தினார். அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்த நிலையில், மழை குறுக்கீடுகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி, நான்காம் நாள் முடிவில் டிராவில் முடிந்தது.

இந்திய அணி சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய ஏ அணியின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இதை போலவே இந்திய அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.