இவர் அணிக்குள் இருந்தால் இந்திய அணி வேற மாதிரி மாறிவிடுகிறது – ஜிம்பாப்வே கோச் புகழ்ச்சி!

0
380

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குள் இருந்தால் இந்திய அணி முற்றிலும் வேறுபட்ட அணியாக தெரிகிறது என ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல் கவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிவுற்றவுடன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது இருந்து முழு உடல் தகுதி பெறமுடியாமல் இந்திய அணிக்குள் இடம்பெற தவித்து வந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற இவர், அந்த அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு மற்றும் கேப்டன்ஷிப் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

- Advertisement -

இதனால் இந்திய டி20 அணியில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் டி20 அணியில் இடம் பெற்ற இவர் இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் என அடுத்தடுத்த தொடர்களில் மிகச் சிறப்பாக பங்களிப்பு கொடுத்தார். ஆசிய கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் தற்போது ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான லேண் குரூஸ்னர் புகழ்ந்திருக்கிறார். அவர் கூறுகையில், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் எந்த ஒரு அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி வேறு கோணத்தில் தெரியும். வேகபந்துவீச்சுஆல்ரவுண்டர் ஆன இவர் மீண்டும் இந்திய அணிக்கு வந்திருப்பது கூடுதல் பலத்தை அந்த அணிக்கு கொடுத்திருக்கிறது. குறிப்பாக நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். டி20 உலக கோப்பைக்கு இது பக்கபலமாக இருக்கும். என்றார்.

இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகள் உடனான ஒருநாள் தொடரை பற்றி பேசிய அவர், “எங்களைப் போன்ற சிறிய அணிக்கு உச்சபட்ச இடத்தில் இருக்கும் பலம் மிக்க இந்திய அணி எதிர்கொள்வது சவாலானதாக இருந்தாலும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்படுவதற்கும் எங்களது தவறுகளை சரி செய்து கொள்வதற்கும் இதுபோன்ற மிகப்பெரிய அணிகளுக்கு எதிரான தொடர் உதவிகரமாக இருக்கும். வங்கதேச அணியை வெற்றி பெற்று நல்ல மனநிலையுடன் இருக்கிறோம். இந்திய அணிக்கு எதிராகவும் நல்ல பங்களிப்பை கொடுப்போம்.” என்று உறுதிபட தெரிவித்தார்.

- Advertisement -