மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து பேசிய கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த ஆண்டு WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
2023-25 WTC தொடரில் இந்திய அணி பெரும்பாலான நேரம் முன்னிலையில் இருந்த போதிலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்விகள் அவர்களின் முதல் WTC பட்டத்தை வெல்லும் கனவை தகர்த்தன. ரோஹித் ஷர்மா டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2025-27 WTC சைக்கிளில் முன்னதாக கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஏமாற்றமாக இருக்கும்:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக WTC-யின் முக்கியத்துவம் குறித்து ஜியோ ஸ்டாரில் கில் பேசினார். அதில்,”நாங்கள் எல்லாவற்றையும் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம். நான் எப்போதும் வெற்றிக்காகவே விளையாடுகிறேன். இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது.”
” இவ்வளவு வலிமையான அணியும், திறமையும் இருந்தும், நாங்கள் WTC இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றால், நாம் ஏமாற்றமடைய வேண்டும்ஏமாற்றமடைய வேண்டும்.அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்கள் பங்கு மற்றும் அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகவும், பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.”
“எங்கள் முழு முயற்சியும் அதை நோக்கியே இருக்கும். ஒரு அணி நம்மை விட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றால், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கில் கூறினார். ஷுப்மன் கில்லின் கேப்டன் பதவி, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டிராவான தொடருடன் ஈர்க்கத்தக்க தொடக்கத்தைப் பெற்றது. 26 வயதான கில், இந்தத் தொடரில் 754 ரன்கள், சராசரியாக 74-க்கு மேல், நான்கு சதங்களுடன் நட்சத்திரமாக ஜொலித்தார்.
எளிமையான திட்டம்:
எனினும் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது குறித்து பேசிய அவர், “திட்டம் எளிமையானது. கடினமாகவும், உறுதியாகவும் கிரிக்கெட் விளையாடுவதை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். எளிய வழிகளைத் தேடவில்லை. தற்போது உலகின் மிகச் சிறந்த நான்கு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப், ஜடேஜா, அக்ஷர் மற்றும் வாஷிங்டன் எங்களிடம் உள்ளனர்.”
இதையும் படிங்க: சிராஜுக்காக பும்ரா செய்த காரியம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள் – களத்தில் என்ன நடந்தது?
“இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அணியும் இரண்டு முக்கிய சவால்களை அறிவார்கள் . சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங். இந்த இரண்டு பகுதிகளிலும் எதிரணியை சோதிப்போம்” என்று கில் கூறினார்.இந்திய அணி தற்போது நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.






