IND vs IRE.. நூலிழையியில் தப்பிய இந்திய அணி.. 2 ரன்னில் முதல் டி20 போட்டியில் வெற்றி.. ஜெய்ஸ்வாலின் சிக்ஸ் காப்பாற்றியது எப்படி ?

0
12615
ICT

இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரு அணிகளுக்கும் இடையே அயர்லாந்து டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அறிமுகமானார்கள். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்தியா அணியின் பேட்டிங் ஆழம் ஏழாவது பேட்ஸ்மேன் வரை மட்டுமே இருந்தது.

ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பிய பும்ரா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் பால்பர்னியை வீழ்த்தினார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் லார்கன் டக்கரை வீழ்த்தினார். பும்ரா விட்டதை அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணா அப்படியே எடுத்துக் கொண்டார். அவரும் ஹாரி டெக்டர் மற்றும் டக்ரோல் இருவரது விக்கெட்டையும் கைப்பற்றினார். நடுவில் ரவி பிஷ்னோய் கேப்டன் பால் ஸ்டெர்லிங் விக்கெட்டை வீழ்த்தினார்.

அயர்லாந்து அணி 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து திடீரென்று ஒட்டுமொத்தமாக சரிந்தது. இதற்கு அடுத்து கர்டிஸ் ஹேம்பர் 39, மார்க் அடைர் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். ஆனால் எட்டாவது பேட்ஸ்மேனாக வந்த மெக்கார்தி அதிரடியில் மிரட்டி நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 33 பண்டில் 51 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார்.

- Advertisement -

அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது அணியாக மழையும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது. இதன் காரணமாக ஐந்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 27 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. துவக்க ஜோடி ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்கள். ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து தேவையான ரன்னை ருத்ராஜ் கொண்டு வந்தார்.

இதே போல் பவர் பிளேவின் கடைசி ஓவர் ஆன ஆறாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி மற்றும் இறுதிப் பந்தில் ஒரு சிக்சர் அடிக்க, பவர் பிளே முடியும்பொழுது இந்திய அணி 45 ரன்கள் எடுத்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வலிமையான முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் யங் வீசிய ஏழாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உள்ளே வந்த திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதியின்படி இந்திய அணி அப்பொழுது இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்து எடுத்து இருந்தது. ஏழாவது ஓவரை முழுமையாக முடிக்கும் முன்பே போட்டி மழையால் தடைபட்டது. தொடர்ந்து பெய்த மழை நிற்காத காரணத்தால் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ருத்ராஜ் 19 ரன்கள், சஞ்சு சாம்சன் ஒரு ரன் உடன் களத்தில் நின்றார்கள்.