இன்று நடக்கும் மூன்றாவது டி20 போட்டியின் நேரத்திலும் மாற்றம்; இந்தியா – வெஸ்ட்இன்டீஸ்!

0
428
Ind vs Wi 3rd t20

வெஸ்ட்இன்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட்இன்டீஸூலும், மீதி இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்திலும் நடக்க இருக்கிறது!

இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 29 ஆம் தேதி டிரினிடாட்டில் நடந்தது. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த ஆட்டத்தில் ஜடேஜா, அஷ்வின், பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்கி அசத்தலாக வென்று இருந்தது!

- Advertisement -

இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி செயின்ட் கிட்ஸ், வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய ஆட்டம், வீரர்களின் லக்கேஜ்கள் வர தாமதமானதால் இரவு 11 மணிக்கே துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட்இன்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது!

இந்த இரண்டாவது போட்டி ஒரு வித்தியாசமான பிரச்சினையால் மூன்று மணி நேரம் தாமதாமாக இரவு 11 மணிக்குத் துவங்கியதால், உலகில் பெரியளவில் இரசிகர்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் இரசிகர்களின் பெரும்பாலோனோர் பார்க்க முடியாது. வீரர்களின் லக்கேஜ் வராததால் போட்டி தாமதமாகத் தொடங்குவதாக அறிவிக்கப்பட, இந்தச் செய்தி கிரிக்கெட் இரசிகர்களுக்கு வினோதமான ஒன்றாக இருந்தது. இதுவரை போட்டி தாமதமாக இப்படியொரு காரணத்தை இந்திய இரசிகர்கள் கேட்டதே இல்லை.

இரண்டாவது போட்டியில் இப்டியான சிக்கல் உருவாகியிருந்தது என்றால், ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு, இரு அணி வீரர்களுக்கும் இதுவரையில் விசா கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினை ஒருபுறமாய் போய்க்கொண்டிருக்கிறது. வெஸ்ட்இன்டீஸில் கடைசி இரு போட்டிகளை நடத்த வாய்ப்பில்லை என்று வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. ஆனால் விசா பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் இன்று வெஸ்ட்இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் வெஸ்ட்இன்டீஸில் நடக்க இருக்கும் கடைசி டி20 போட்டி, நேற்று போட்டி நடந்த அதே வார்னர் பார்க் மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியின் நேரத்திலும் தற்போது மாற்றம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்க இருந்த ஆட்டம், ஒன்னரை மணி நேரம் தாமதமாக, இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குத் தொடங்குகிறது. வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட்டின் போட்டி ஏற்பாடுகள் மிகச் சுமாராய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது!