இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இங்கிலாந்து ரன்கள் குவித்த நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி திருப்பி பதிலடி கொடுத்து அசத்தி இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வழக்கம் போல் அதிரடியாக விளையாடி முதல் நாளில் 89 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் அதிரடியாக விளையாடி 127 ரன், துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 71 ரன், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டாக்ஸ் 69 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் பேக்கப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் பிராத்வெயிட் 48 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து மைக்கேல் லூயிஸ் 21, மெக்கன்சி 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டு விடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
இந்த நிலையில் ஜோடி சேர்ந்த அலிக் ஆதனஸ் மற்றும் கெவிம் ஹாட்ஜ் இருவரும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 225 பந்துகளில் 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த அலிக் ஆதனஸ் அதிரடியாக விளையாடி 99 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கெவிம் ஹாட்ஜ் சதம் அடித்து 171 பந்துகளில் 120 ரன்கள் குவித்து வெளியேறினார். முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் மேல் இருந்த விமர்சனங்களை மொத்தமாக இந்த ஜோடி துடைத்துவிட்டது.
இதையும் படிங்க : என் ஆபரேஷன் முடிஞ்சதும்.. இந்திய டீம்ல இருந்து 2 பேர் மட்டும்தான் விசாரிச்சாங்க – முகமது சமி பேட்டி
இதற்கு அடுத்து ஆட்டம் இழக்காமல் ஜேசன் ஹோல்டர் 67பந்துகளில் 23 ரன்கள், ஜோசுவா டி சில்வா 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 84 ஓவர்களில் அதிரடியாக 351 ரன்கள் எடுத்திருக்கிறது. ஓவருக்கு 4.18 ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து அணியை விட 65 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஐந்து விக்கெட்டுகள் கைவசம் மூன்றாம் நாள் நாளை முன்னிலை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்!






