தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கவுதம் கம்பீர் பேட்ஸ்மேன்கள் பந்து வீசவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இந்த வகையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராக உருவெடுத்து இருப்பதோடு வெற்றிகரமானவராகவும் மாறி இருக்கிறார். ஆனால் அவர் பந்து வீச்சுக்கு தடை விதித்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாவும் நியமிக்கப்பட்டார். மேலும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு இலங்கை அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது அவர்களிடம் ஆறு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. எனவே இந்த போட்டியில் அந்த அணி எளிதாக வெல்லும் என்ற நிலையில் இருந்த பொழுது, கடைசி இரண்டு ஓவர்களை வீசிய ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் போட்டியை சூப்பர் ஓவருக்கு மாற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த போட்டியில் சூரியகுமார் ஆட்டத்தின் இருபதாவது ஓவரை பந்துவீசி இலங்கை வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை என்கின்ற நிலையில் இருந்த பொழுது 5 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றி ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் சூரியகுமார் யாதவ் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சந்தேகத்துக்குரிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா அணியில் இருந்த சூரியகுமார் யாதவ் கம்பீரால் இரண்டு ஓவர்கள் பந்து வீசவைக்கப்பட்டார். அந்த இரண்டு ஓவர்களையும் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் எதிர்கொண்டு விளையாடினார்கள்.
இந்த போட்டிக்குப் பிறகு இவரது பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. இதை ஆராய்ந்த அந்த போட்டியில் இருந்த நடுவர்கள் ராட் டக்கர் மற்றும் குமார் தர்மசேனா ஆகியோர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சூரியகுமார் யாதவ் முழங்கை வளைவதாகக் கண்டுபிடித்தார்கள். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை சந்தேகத்துக்குரிய முறையில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வைத்தது.
இதையும் படிங்க : இந்திய அணி ஜெயிக்காததுக்கு காரணம்.. கம்பீர் எடுத்த அந்த ஒரு முடிவுதான் – அஜய் ஜடேஜா விமர்சனம்
மேலும் சூரியகுமார் யாதவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இப்படியான பிரச்சனை இருந்தது. இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து பந்துவீச்சில் வேலை செய்து, தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக உயர்ந்ததோடு, இனி அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பந்து வீசவும் முடியும் என சூரியகுமார் யாதவ் நிரூபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.