ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வி வடுவே மறக்காத நிலையில், அடுத்ததாக டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் வெறும் 91 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கொஞ்சம் கவுரவமாக 135 ரன்கள் எடுத்து மீண்டும் தோல்வியை சந்தித்தது. இந்த டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
ரிஸ்வானை நீக்கியது ஏன்?
இதனால் பாகிஸ்தான் அணியின் புதிய டி20 கேப்டனாக சல்மான் ஆகா நியமனம் செய்யப்பட்டார். ஆனாலும் பாகிஸ்தான் அணியின் தோல்வியை மட்டும் யாராலும் நிறுத்தப்படவில்லை. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பதவி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.
அதன்படி முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசும் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு முதலில் நிரந்தர தலைவர் தேவை என்று நினைக்கிறேன். அதேபோல் பாபர் அசாம் கேப்டனாக இருக்கும் போது போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் முகமது ரிஸ்வானை 6 மாதத்திலேயே கேப்டன்சியில் இருந்து நீக்கியது ஏன்?
ஷாகித் அப்ரிடியாக ஆடாதீர்கள்
அதேபோல் பாகிஸ்தான் அணியின் அத்தனை வீரர்களும் ஷாகித் அப்ரிடியை போல் பேட்டிங் ஆட நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அனைத்து போட்டிகளிலும் எந்த அணியாலும் 200 ரன்களை அடிக்க முடியாது. இந்த டி20 தொடருக்கு முதல்தர கிரிக்கெட்டில் 10 போட்டிகள் மட்டுமே ஆடிய வீரர்களை அனுப்பி இருக்கிறார்கள்.
எந்த பிட்ச்களுக்கு அதிகளவிலான ஸ்பின்னர்கள் தேவையோ, அங்கு வேகப்பந்துவீச்சாளர்களையும், எந்த பிட்ச்-க்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையோ அங்கு ஸ்பின்னர்களையும் அனுப்புகிறார்காள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், பாகிஸ்தான் அணி டி20 தொடரை இழக்கும்.






