லண்டன் ஓட்டல் அறைக்குள் புகுந்து இந்திய வீராங்கனை தானியா பாட்டியாவின் நகை பணம் கிரெடிட் கார்டுகள் திருட்டு; ட்விட்டரில் கடுமையான குற்றச்சாட்டு!

0
792
ICT

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, கடைசியாக இங்கிலாந்து அணியுடன் தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி முடிந்த போட்டியில் செய்த ரன்அவுட் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன், 24 வயதான பஞ்சாபைச் சேர்ந்த இந்திய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்டர் தானியா பாட்டியா தான் தங்கியிருந்த லண்டன் ஹோட்டல் அறைக்குள் புகுந்து தனது பணம் நகை மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை யாரோ கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக ட்விட்டரில் கடுமையான புகார் செய்திருக்கிறார். தற்போது இந்த விஷயம் பெரிதாகி இருக்கிறது.

தானியா பாட்டியா கூறியுள்ளது வெறும் கொள்ளை சம்பவத்தோடு மட்டும் வைத்து பார்க்க முடியாது. ஏனென்றால் இது இந்திய வீராங்கனைகளின் பாதுகாப்பு சம்பந்தமானது. இதே கொள்ளை நடந்த பொழுது வீராங்கனை அறைக்குள்ளிருந்து அவர்களுக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்தால் அது சர்வதேச அளவில் மோசமான பின்விளைவுகளை உருவாக்கியிருக்கும்.

நடந்த சம்பவம் பற்றி தானியா பாட்டியா ட்விட்டரில் கூறும்பொழுது ” மேரியட் ஹோட்டல் லண்டன் மைடா வேல் நிர்வாகத்தின் மேல் நான் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்தேன். நான் இல்லாத பொழுது எனது தனிப்பட்ட அறைக்குள் யாரோ புகுந்து, எனது நகை, பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இந்தக் கொள்ளை நான் இந்திய அணியின் ஒரு வீராங்கனையாக தொடரும்போது நடந்திருக்கிறது ” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தை சாடி அவர் தெரிவித்துள்ள கருத்தில் “இந்த விஷயத்தில் விரைவான விசாரணை மற்றும் தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமான ஹோட்டல் பார்ட்னரில் இது போன்ற பாதுகாப்பு இல்லாதது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதன் மூலம் அவர்களுக்கும் இதைப் பற்றிய தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

தானியா பாட்டியாவின் இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் ” ஹாய் தானியா! இதைக் கேட்டு நாங்கள் வருந்துகிறோம். தயவுசெய்து உங்கள் பெயரையும், நீங்கள் முன்பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியையும், நீங்கள் இங்கு தங்கியிருந்த தேதிகளையும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நாங்கள் அதிலிருந்து விசாரணையை ஆரம்பிக்கிறோம் ” என்று கூறியிருக்கிறார்கள்!