இப்போது விராட்கோலிக்கு நடக்கும் எல்லாமே, அப்போது சச்சினுக்கும் நடந்தது – ராகுல் டிராவிட் பேட்டி!

0
754

இப்போது விராட் கோலிக்கு நடக்கும் அத்தனையும், நான் பேட்டிங் செய்த காலத்தில் அப்படியே சச்சினுக்கும் நடந்ததை பார்த்திருக்கிறேன். ரசிகர்களின் அளவு கடந்த அன்பால்தான் இது நடக்கிறது என்று பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தனது பார்மிற்கு வந்து கொண்டிருக்கிறார். முன்னதாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீண்ட காலமாக அடிக்கப்படாமல் இருந்த சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, கிட்டத்தட்ட 1,200 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதம் அடித்து மீண்டும் நம்பிக்கையை கொடுத்தார். இவரது சதத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் விராட் கோலியின் முகத்தில் மிகப்பெரிய நிம்மதி மற்றும் அமைதி இரண்டும் காணப்பட்டது. வழக்கமான அவரது ஆக்ரோஷமான கொண்டாட்டம் அதில் இல்லை.

இறுதியில் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டநாயகனாக 186 ரன்கள் அடித்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே உரையாடல்கள் நடந்தது. அப்போது ராகுல் டிராவிட் பல கேள்விகளை விராட் கோலியின் முன்பு வைத்தார். அதற்கு நேர்த்தியாக தனது வழக்கமான பாணியில் விராட் கோலியும் பதில் கொடுத்தார்.

அதில் அதிகபட்சமாக சதம் மற்றும் சதம் அடிக்காதபோது இருந்த மனநிலை, அதற்காக வந்த விமர்சனங்கள் என அனைத்தைப் பற்றியும் கேட்கப்பட்டது. இந்த உரையாடல் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்தபோது, சில அனுபவங்களை டிராவிட் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிட்டு அந்த காலத்தில் அவருக்கு நடந்தது அப்படியே விராட் கோலிக்கும் நடந்து வருகிறது என தெரிவித்தார். ராகுல் டிராவிட் கூறியதாவது:

“இந்தியாவில் கிரிக்கெட் எந்தளவிற்கு மதிக்கப்படுகிறது என்று நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த வீரர்களாக இருந்தால் அவர்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அந்த உயரத்திலேயே இருக்கும்.

நான் பேட்டிங் செய்த காலங்களில் சச்சினிடம் ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் என்று நன்கு உணர்வேன். ஒவ்வொரு போட்டியிலும் அவர் ரன்கள் அடிக்க வேண்டும். சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பல நேரங்களில் சச்சின் பூர்த்தி செய்திருந்தாலும், சில நேரங்களில் அது தவறும் பொழுது அதற்கேற்றவாறு விமர்சனங்களையும் நிறைய பெற்றிருக்கிறார்.

ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மட்டுமே அதிகமாக இருக்குமே தவிர, மைதானம் எப்படிப்பட்டது? ஏன் அவர் அடிக்கவில்லை? என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அதீத அன்பின் காரணமாகவே இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த காலகட்டத்தில் சச்சினுக்கு நிகழ்ந்தது அப்படியே விராட் கோலிக்கும் நிகழ்கிறது. ஏனெனில் அத்தகைய உயரிய தரத்தை முந்தைய போட்டிகளில் விராட் கோலி காட்டியுள்ளார். சதம் அடித்தபிறகு இப்போது நிம்மதியாக உணர்வார் என்று நினைக்கிறேன். இதை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர வேண்டும்.” என்று டிராவிட் பேசினார்.