இன்று இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனுக்கு வந்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டோனி டி டார்சி ஆட்டம் இழக்காமல் 119 ரன்கள் எடுக்க, 42 ஓவர்களில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அதற்குப் பின்பு கொஞ்சம் நேரம் ஆக ஆக விக்கெட் பேட்டிங் செய்ய ஓரளவுக்கு சாதகமாக மாறியது. முதலில் பேட்டிங் செய்ததால் இந்திய அணிக்கு இந்த சாதகம் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்தது.
தோல்விக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் கூறும் பொழுது ” ஒருவேளை நாங்கள் டாஸ் வென்று இருந்தால் எல்லாம் மாறி இருக்கும். முதல் பாதியில் பந்துவீச்சுக்கு நிறைய சாதகம் இருந்தது. இது கடினமான விக்கெட்தான் ஆனால் நானும் சாயும் செட் ஆகி விட்டோம். அங்கிருந்து நாங்கள் மேற்கொண்டு விளையாடு இருந்தால் 50, 60 ரன்கள் சேர்த்து எடுத்திருக்க முடியும். ஆனால் ஆட்டம் இழந்து விட்டோம். இதுதான் இந்த போட்டியில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம்.
மேலும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து ஆரம்பத்தில் நல்ல உதவி கிடைத்தது. ஒவ்வொரு தனி நபருக்கும் என கேம் பிளான்கள் கொண்டு அவர்கள் வசதியாக இயல்பாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். கிரிக்கெட்டில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. வீரர்கள் சொந்தமாக கேம் பிளான் கொண்டு வருவார்கள் என்று நாம் நம்புகிறோம்.
எங்களுக்கு ஆரம்பத்தில் முதல் 10 ஓவர்களில் பந்துவீச்சில் கொஞ்சம் உதவி இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் வீசிய நிறைய பந்துகள் பேட்டை விட்டு விலகி சென்றன. ஏதாவது எட்ஜ் கிடைத்திருந்தால் முடிவு வேறாக கூட இருந்திருக்கும். நாங்கள் அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து இருக்கலாம். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்கு கவனம் செலுத்த விரும்புகிறோம்!” என்று கூறி இருக்கிறார்!