இந்திய அணிக்குள் இப்படியொரு முறைகேடு நடக்கிறது! அதான் ரோகித் சர்மா ஈஸியாக கேப்டன் பொறுப்பில் இருக்கிறார்! – திடுக்கிடும் கருத்தை சொன்ன சுனில் கவாஸ்கர்!

0
2847

“தேர்வுக்குழு முறைகேடாக நடந்துகொள்கிறது. இல்லையெனில் ரோகித் சர்மா விஷயத்தில் இவ்வளவு மெத்தனமாக இருக்கமாட்டார்கள்!.” என கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் தலைமையிலான இந்திய அணி ஆசியகோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என விளையாடிய மூன்று மிகப்பெரிய தொடர்களிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

ஆசிய கோப்பையில் சூப்பர் ஃபோர் சுற்றில் வெளியேறியது, டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என பெற்ற தோல்விகளும் மிகவும் மோசமானது என்பதால் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது கடும் கேள்விகள் எழுந்து வருகிறது.

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஒரு நாள் போட்டிகளில் இல்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளுக்கு வேறொரு கேப்டனை கொண்டு வர வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளும் பிசிசிஐ இடம் வைக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ இதற்கு செவி சாய்க்காமல் ரோகித் சர்மாவே தொடர்ந்து கேப்டனாக இருப்பார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

அடுத்து வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதற்கு கேப்டனாகவும் ரோகித் சர்மா இருக்கிறார். இதனை குறிப்பிட்டு இந்திய தேர்வுக்குழு முறைகேடாக நடந்துகொள்கிறது. உரிய முறையில் இங்கே வீரர்களின் தேர்வு நடத்தப்படவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு ரோகித் சர்மாவை அழைத்து பேசப்பட்டதா? தேர்வு குழுவினர் ஏதேனும் கேள்விகளை எழுப்பினார்களா? எதற்காக டாஸ் வென்று பவுலிங் எடுத்தீர்கள்? அஸ்வின் ஏன் உள்ளே எடுக்கப்படவில்லை? ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உரிய திட்டமிடல் இல்லாமல் பௌலிங் செய்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். எதுவும் செய்யவில்லை. ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் பல தவறுகளை செய்தாலும், எவ்வளவு ஈஸியாக கேப்டன் பொறுப்பில் தொடர்கிறார். இது நல்லதல்ல.

பிசிசிஐ தேர்வுகுழுவை நடத்துகிறதா? இல்லையா? என்பதே இங்கே கேள்வியாக இருக்கிறது. ஒருமுறை கேப்டனாக நியமிக்கப்பட்டுவிட்டால், அடுத்தடுத்து தொடர்களில் தோல்வியை சந்தித்தாலும் எதுவும் கேட்கமாட்டோம் என்று இருந்தால் கேப்டன்களுக்கு எப்படி பொறுப்பு இருக்கும்?. ஏன் எதற்காக என்று குறைந்தபட்ச கேள்விகளையாவது எழுப்ப வேண்டும். அது நடக்கவில்லை எனில், கேப்டன்களும் தன் போக்கில் செயல்பட்டு விடுவார்கள்.

இது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சிறந்தது அல்ல. முற்றிலும் முறைகேடான செயலாகும். இளம் தலைமுறை வீரர்களும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே செயல்படுவார்கள். அதை கருத்தில் கொள்ள வேண்டும். முறையான திட்டங்களுடன் செயல்படுங்கள்.

எங்களது காலத்தில் டீம் மீட்டிங் கேப்டன்களுக்கும் தேர்வுகுழுவினருக்கும் நடத்தப்படும். அப்போது ஒவ்வொரு தொடருக்குப்பின்னரும் கேப்டன்கள் மனநிலையை குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு அடுத்தடுத்த தொடர்களுக்கு அவரே கேப்டனாக இருக்கலாமா? என்கிற முடிவுகளும் எடுக்கப்படும். இப்படி இருக்கையில் கேப்டன்கள் பொறுப்புடன் செயல்பட்டார்கள்.

ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது? இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 10 வருடங்கள் கோப்பையை வெல்லவில்லை என்று குறை சொல்வது மட்டும் எப்படி சரியாகும்? தேர்வுக்குழுவினரும் உரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும். கேப்டனை கேள்விகள் எழுப்பி சோதிக்கவேண்டும்.” என்று சாடினார் கவாஸ்கர்.