“எங்க வீரர்கள் ஐபிஎல் விளையாடாதது உலக கோப்பைல பின்னடைவா போயிடுச்சு!” – பாகிஸ்தான் பயிற்சியாளர் புதிய காரணம்!

0
641
Arthur

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை பெற்ற பொழுது, மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி, அந்த நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய பூகம்பம் உருவானது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்று தற்காலிகமாக விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பிட்ட அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓரளவுக்கு ரன் ரேட்டும் அந்த அணிக்கு கிடைத்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மற்றும் நியூசிலாந்து அணி என இரண்டு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பில் வலிமையாக நீடிக்க வேண்டுமென்றால், அடுத்து இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கின்றன.

இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேசும் பொழுது “எங்களுக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் சென்ற ஒவ்வொரு மைதானமும் எங்கள் வீரர்களுக்கு இதுவரை விளையாடாத புதிய மைதானங்களாக இருந்தன. இது உற்சாகமான ஒன்று, அதை எங்கள் வீரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

- Advertisement -

எங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரை டிவியில்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஈடன் கார்டன், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற முக்கிய மைதானங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவியில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தற்போது இது எல்லாமே புதிதாக இருந்தது. இது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தாலும் சாக்காக நான் கூறப்போவது கிடையாது.

நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன் நாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் சரிவர விளையாடவில்லை.

நாங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும்தான் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதுதான் எங்களுடைய உண்மையான சிறப்பான செயல்பாடு. மற்ற போட்டிகளில் நாங்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு துறையில் மட்டுமே சரியாக இருந்தோம்.

தற்போது நான் யாரையும் குறை சொல்ல முடியாது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாங்கள் சிறந்ததை கண்டோம். அது மிகவும் தாமதமானது என்று நாங்கள் நினைக்கவில்லை. அடுத்த மிக முக்கியமான போட்டிகளுக்கு எங்கள் வீரர்கள் மிகவும் தயாராக இருக்கிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்,