“அவருக்கான தொடக்கம் கிடைத்துவிட்டது என்றால் உங்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது” – ஆஸ்திரேலியா அணியை எச்சரித்த ரவி சாஸ்திரி!

0
7431

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நாக்பூரில் தொடங்க இருக்கிறது . இந்தப் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் தொடர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .

இந்தப் போட்டிகளுக்காக எந்த மாதிரியான ஆடுகளங்கள் அமைக்கப்படும் என்ற கருத்து மோதல்களும் சர்ச்சைகளும் ஒருபுறம் சென்று கொண்டிருக்க இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தப் போகும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் யார் என கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருபுறமும் கணித்து வருகின்றனர் .

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் காயம் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது . ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஸ்டார்க் ஹேசல்வுட் ஆகியோரின் காயம் அந்த அணிக்கு பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்த கூடும். இந்திய அணியை பொருத்தமட்டில் ஐயர் மற்றும் பண்டின் இடத்தை நிரப்ப போகும் வீரர்கள் யார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுந்திருக்கிறது .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சிக்கு ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என தெரிவித்திருக்கிறார் . டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சமீப காலமாக விராட் கோலி சிறந்த பார்மில் இல்லை என்றாலும் அவர் ஆஸ்திரேலியா அணியுடன் தன்னுடைய பழைய பார்மிற்கு வருவார் என தான் உறுதியுடன் நம்புவதாக தெரிவித்திருக்கிறார் .

இது தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ள அவர்” விராட் கோலி இந்த தொடருக்காக மிகுந்த வேட்கையுடன் காத்துக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன் . உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்னதான் பார்மில் இல்லை என்றாலும் ஒரு பலம் வாய்ந்த எதிர் அணியுடன் விளையாடும் போது இயல்பாகவே அவர்களது ஆக்ரோஷம் வெளிப்படும் . மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய எல்லா சந்தர்ப்பங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார் . அது இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையிலும் தொடரும் எனக் கூறியுள்ளார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசி உள்ள ரவி சாஸ்திரி ” விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரை சிறப்பாக தொடங்க வேண்டும் என்று விரும்புவார் . இதற்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் புரிந்த சாதனைகள் அவருக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமையும் . முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் அவர் ஒரு தொடக்கத்தை பெற்று விட்டால் அதன் பிறகு ஆஸ்திரேலியா அணியினரால் அவரை கட்டுப்படுத்த முடியாது . அவர்களது பந்துவீச்சுக்கு இவர்தான் தடைக்கல் . இதனை ஒரு எச்சரிக்கையாகவே நான் அவர்களுக்கு கூறுகிறேன்”என்று தெரிவித்திருக்கிறார் சாஸ்திரி .

ஒரு நாள் போட்டிகளில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார் . கடைசியாக 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் இரண்டு சதங்களை கோலி அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலியா அணியுடன் எப்போதுமே விராட் கோலி சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்பதால் இந்த தொடரில் அவரது ஆட்டத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .