“ஆடுகளத்தில் இந்த அணுகுமுறையை மாற்றவில்லை என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு 4-0 உறுதி” – ரவி சாஸ்திரி பேட்டி!

0
176

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி துவங்க இருக்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெரும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணியின் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

- Advertisement -

பாகிஸ்தானில் சென்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலியா அணி தங்களது நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றி பெற்று வலுவான நிலையில் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் தோல்வி அந்த அணியின் நம்பிக்கையை அசைத்து விட்டது. முக்கிய வீரர்களின் காயம் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் ஆட்டத்தைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐசிசி மீடியாவிற்கு அவர் அளித்த பேட்டியில் “ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் முழு நம்பிக்கையுடன் ஆடவில்லை”என தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து பேசி உள்ள அவர் ” ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியச் சூழலுக்கு தங்களை முழுமையாக ஒப்புவித்து ஆடவில்லை. மேலும் அவர்கள் தங்களது தற்காப்பு ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆட தவறி விட்டனர். டெஸ்ட் போட்டிகளின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் ஆட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஆடாததும் அவர்களுக்கு மிகப்பெரிய சறுக்கலை தந்தது. அவர்கள் இந்த தொடரில் மீண்டு வர டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளுக்கு செல்ல வேண்டும்”என்று கூறி இருக்கிறார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி உள்ள ரவி சாஸ்திரி “இந்திய ஆடுகளங்களில் நீங்கள் உங்கள் தற்காப்பு ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் நிச்சயமாக உங்களுக்கு வாய்ப்பில்லை. இது போன்ற ஆடுகளங்களில் ரண்களைப் பெற வேண்டும் என்றால் சிறிது நேரம் நீங்கள் செலவிட வேண்டும். உங்களுடைய தற்காப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஆடுகளத்தில் எவ்வாறு நேரத்தை செலவிட முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் “உங்களின் தற்காப்பு ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் 4-0 என்ற தோல்வியை தவிர்க்க முடியாது”எனக் கூறினார்.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி”4-0 என்ற கணக்கில் இந்தத் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தினை மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியா எதிர்கொள்ள அவர்களுக்கு மிகப்பெரிய உளவியல் பலத்தை கொடுக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கும் இங்கிலாந்து நாட்டின் சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தாலும் இந்திய அணி அந்தப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி அவர்களுக்கு கை கொடுக்கும்”என கூறி முடித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.