“அஷ்வின் விளையாடி இருந்தா நாங்க 190 ரன்னே எடுத்து இருக்க முடியாது..!” – பாக் லெஜன்ட் ரஷீத் லத்தீப் அதிரடி பேச்சு!

0
4172
Ashwin

நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது ஒரு சுவாரசியமான கதையாக அமைந்திருக்கிறது.

உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்தது மட்டும் இல்லாமல், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு விளையாடவும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு முனையில் ரன் அழுத்தத்தை உருவாக்கி கேமரூன் கிரீன் விக்கெட்டையும் கைப்பற்றி ஆஸ்திரேலியா 200 ரன்களை எட்ட முடியாமல் போவதற்கு அஸ்வினும் ஒரு காரணமாக அமைந்தார்.

ஆனால் அதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத்திலும் அஸ்வின் விளையாடும் அணியில் சேர்க்கப்படவில்லை. இதில் இந்தியா தாண்டி பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருக்கிறது.

மேலும் தற்பொழுது எந்த அணிகளுக்கும் இல்லாத வகையில் இந்திய அணியால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தசிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ் பந்துவீச்சை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடிவது மிகுந்த கடினமாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் லெஜன்ட் ரசித் லத்திப் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை அஸ்வின் மற்றும் குல்தீப் பந்துவீச்சின் மீது வைத்து பேசி இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “குல்தீப் பந்து வீச்சுக்கு எதிராக நாங்கள் மிக தயக்கத்துடன் விளையாடினோம். ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கூட குல்தீப்பை அடித்து விளையாட முயற்சி செய்யவில்லை. நாங்கள் அவரது 10 ஓவர்களை விளையாடினால் போதும் என்று இருந்தோம்.

மேலும் அவர் எந்த போட்டியிலும் ஓய்வு எடுக்காமல் எல்லா போட்டிகளிலும் விளையாடினார் என்றால், இந்த உலகக் கோப்பை தொடரில் அவரே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருப்பார்.

இந்தியா அஸ்வினை தேர்வு செய்யாதது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இந்தியாவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களுடன் அஸ்வின் விளையாடி இருந்தால் 190 ரன்கள் வந்திருக்காது!” என்று கூறியிருக்கிறார்!