நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 20வது போட்டியில் இன்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டான்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்ட திருப்பூர் அணி சேலம் அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. திருப்பூர் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 68 பந்துகளில் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் 39 பந்துகளில் 50 ரன்கள், துசார் ரகேஜா 49 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்கள்.
இதற்கு அடுத்து அதிகபட்சமாக பாலச்சந்தர் அனிருத் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். மேலும் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன் மட்டுமே எடுத்தார்கள். 20 ஓவர்களில் திருப்பூர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் பரப்பில் குரு சாயி மற்றும் பொய்யாமொழி இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சேலம் அணி 22 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதற்கு அடுத்து ஆர்.ராஜன் 39 பந்துகளில் 53 ரன்கள், ஹரிஷ் குமார் 21 பந்தில் 31 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது.
திருப்பூர் அணியின் தரப்பில் பந்துவீச்சில் முகமது அலி 3, நடராஜன் மற்றும் அஜித் ராம் 2 இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். நடப்பு டிஎன்பிஎல் தொடரில் நடராஜன் பந்துவீச்சில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலங்கை தொடர்.. இந்திய அணிக்கு புதிய பவுலிங் கோச்.. யார் இந்த சாய்ராஜ் பஹுதுலே.?
இத்தோடு இந்திய அணியில் நடராஜனை தேர்வு செய்யவில்லை என்று தமிழக ரசிகர்கள் பெரிய அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சனம் செய்து வரும் நிலையில், நடராஜன் டிஎன்பிஎல் தொடரில் பெரிதாக பந்துவீச்சில் சாதிக்காதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. இன்று நடராஜன் சிறப்பாகத் திரும்பி வந்திருக்கிறார்.