ஐசிசி டி20 ரேங்கிங்.. ரிங்கு சிங் 46 இடங்கள் கிடுகிடு உயர்வு.. மொத்த இந்திய பேட்ஸ்மேன்களின் ரேங்கிங் பட்டியல்.. முழு விவரம்!

0
1134
Rinkusingh

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்து, அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஜூலை மாதம் நடக்க இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டு, அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா மூவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சூரியகுமார் யாதவ் 865 புள்ளிகள் உடன் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறார். இதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இவரை விட 78 புள்ளிகள் குறைவாக 787 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

முதல் 10 இடத்தில் சூரியகுமார் யாதவுக்கு அடுத்து ருதுராஜ் மட்டுமே 681 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருந்து வருகிறார். இதற்கு அடுத்து பத்து இடங்கள் சரிவைக் கண்டு ஜெய்ஸ்வால் 545 புள்ளிகள் உடன் 29ஆவது இடத்தில் இருக்கிறார்.

சில ஆண்டுகளாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடாத விராட் கோலி 521 புள்ளிகள் உடன் 37வது இடத்திலும், இஷான் கிஷான் 504 புள்ளிகள் உடன் 44வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இந்திய டி20 அணியில் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று விளையாடி வரும் இளம் வீரர் திலக் வர்மா 476 புள்ளிகள் உடன் 55வது இடத்திலும், கேஎல்.ராகுல் 467 புள்ளிகள் உடன் 57வது இடத்திலும், சுப்மன் கில் 12 இடங்கள் சரிந்து 464 புள்ளிகள் உடன் 60வது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 464 புள்ளிகள் உடன் 62வது இடத்திலும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து காயத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா 432 புள்ளிகள் உடன் 70வது இடத்திலும், தற்போது இந்திய டி20 அணியில் இடம் கிடைத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 428 புள்ளிகள் உடன் 72 ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 39 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்த ரிங்கு சிங் 46 இடங்கள் முன்னேறி, தற்பொழுது 464 புள்ளிகள் உடன் 59 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இது இவருடைய சிறந்த தற்போதைய தரவரிசையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.