“ஆர்சிபி என்னை அந்த ஏலத்தில் எடுத்திருந்தால்..” – உருக்கமாக பேசிய ராஸ் டெய்லர்!!

0
89

ஆர்சிபி அணி என்னை அந்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்திருந்தால், நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருப்பேன் என முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து அணியின் லெஜன்ட் ராஸ் டெய்லர், தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தனது இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சுவாரசியமான மற்றும் இன்னல்களை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் துவக்க காலத்திலிருந்து விளையாடிய வெளிநாட்டு வீரர்களுள் ராஸ் டைலர் ஒருவர். 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். 2008-2011 வரை மூன்று வருடங்கள் அந்த அணியில் விளையாடிய இவர், 2012ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார். 22 போட்டிகளில் பெங்களூர் அணிக்கு விளையாடிய டெய்லர், 500 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். அப்போது பெங்களூரு அணிக்கு மிகச்சிறப்பாக விளையாடிய வீரர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

2012 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் தன்னை பெங்களூர் அணி எடுத்திருந்தால், இன்னும் சில ஆண்டுகள் எனது கிரிக்கெட் வாழ்க்கை நீடித்திருக்கும் என தனது சுயசரிதை புத்தகத்தில் ராஸ் டெய்லர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டதாவது, “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நான் மேலும் சில ஆண்டுகள் விளையாடுவதற்கு விருப்பப்பட்டேன். 2012 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் என்னை எடுப்பார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்காமல் போனது. அப்போது மிகவும் வருத்தப்பட்டேன். எந்த ஒரு அணியும் தனது வீரர்கள் மீது உணர்வு பூர்வமாக இருக்கக்கூடாது. அணியின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் தனிப்பட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒரு அணி இருந்திட முடியாது என உணர்ந்து கொண்டேன். அப்போது 9,50,000 அமெரிக்க டாலர்களுக்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நான் மிகவும் நம்பினேன். ஒரே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற நினைத்தேன்.” என்று பகிர்ந்திருந்தார்.

“ஆர்சிபி அணி எடுக்காமல் போனது, எனக்கு சில நல்ல விஷயங்களும் நடந்தது. நான் பெங்களூரு அணியை விட்டு வெளியேறவில்லை என்றால் சேவாக், ஷேன் வார்னே, மகிலா ஜெயவர்த்தனே, யுவராஜ் சிங் என கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர்களுடன் விளையாடியிருக்க முடியாது எனவும் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

2012 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு விளையாடிய ராஸ் டெய்லர், அடுத்த ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் 2014 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு திரும்பிவிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என நான்கு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் ராஸ் டெய்லர் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணிக்காக விளையாடும் பொழுது கேப்டன் சேவாக், அவரது ஹோட்டலுக்கு வீரர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ராஸ் டைலர் சில உணவுகளை விரும்பி சாப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்த நாள் போட்டி இருந்துள்ளது. போட்டியின் நடுவே ராஸ் டைலர் விரும்பி சாப்பிட்ட உணவை குறிப்பிட்டு அதை ரசித்தது போல, பேட்டிங் ரசித்து செய் என அறிவுரை கூறியதாகவும் அதைக் கேட்டதும் இவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும் டைலர் குறிப்பிட்டுள்ளார்.