இந்திய அணி தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் முடித்துக் கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் விளையாட இருக்கிறது.
இந்த ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கில் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் கிடையாது. மேலும் சூரிய குமார் யாதவும் கழட்டி விடப்பட்டிருக்கிறார்.
இதன் காரணத்தால் ருத்ராஜ், சாய் சுதர்ஷன், ரஜத் பட்டிதார், ரிங்கு சிங் திலக் வர்மா என இளம் வீரர்களைக் கொண்டு அணி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடன் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இணைந்து விளையாடுவார்கள். சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாக இருக்கிறது!
தற்பொழுது முதல் போட்டிக்கு இதிலிருந்து எந்த நான்கு வீரர்களுக்கு பேட்டிங் யூனிட்டில் இடம் கிடைக்கும் என்பது சுவாரசியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
மேலும் தற்பொழுது இளம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை தென் ஆப்பிரிக்கா மண்ணில் வைத்து வழிநடத்த இருக்கும் கேஎல்.ராகுலுக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. இது தொடர்பாக அவர் தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து கே.எல். ராகுல் கூறும் பொழுது “நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று விரும்புகிறோமோ அதில் பெரிய மாற்றம் மிகவும் இருக்காது. எங்களிடம் சில புதிய முகங்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் செய்ததை திருப்பி அப்படியே செய்வார்கள் என்று இப்பொழுது எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்கள் நன்றாக வருவதற்கு நாம் காத்திருக்க வேண்டும். என் தரப்பில் இருந்து இளம் வீரர்களுக்கு இந்த அழுத்தத்தை கொடுக்க மாட்டேன்.
எங்களுக்கு முன்னால் உள்ள விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். உலகக் கோப்பை தொடரை விளையாடியது மிகவும் உற்சாகமாக இருந்தது. ஆனால் இந்த சூழ்நிலையில் நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்று சில விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும். எல்லா வீரர்களும் அணிக்காக தங்கள் வேலையை செய்வார்கள்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!