“நான் இந்திய அணிக்கு ஆலோசகராக வர விரும்பறேன்.. காரணம் இதுதான்!” – யுவராஜ் சிங் பேச்சு!

0
436
Yuvraj

இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக கைப்பற்றியது. இந்திய அணி கைப்பற்றிய முதல் ஐசிசி தொடர் அதுவாகும்.

இதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து மீண்டும் அவரது தலைமையிலேயே இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களையும் இந்தியா கைப்பற்றுவதற்கு தனி ஒரு வீரராக மிக முக்கிய காரணமாக இருந்தவர், சிறப்பான பேட்டிங் செய்வதோடு இடது கை சுழற் பந்து வீச்சில் பங்களிப்பும் செய்யக்கூடிய, சிறந்த பீல்டரான யுவராஜ் சிங்!

இதற்குப் பிறகு இந்திய அணி எந்த ஒரு உலகக் கோப்பை தொடர்களையும் வெல்லவில்லை. தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுகளில் தோற்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை இழந்தது.

இதுகுறித்து பேசி உள்ள யுவராஜ் சிங் கூறும் பொழுது “மென்டர் அதாவது வழிகாட்டும் வேலை நான் செய்ய விரும்பும் ஒன்று. வரும் ஆண்டுகளில் என் குழந்தைகள் செட்டில் ஆனதும், கிரிக்கெட்டுக்கு திரும்பி இளைஞர்கள் சிறந்து விளங்க உதவ விரும்புகிறேன். பெரிய போட்டிகளில் நமக்கு பெரிய மனச்சவால்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் இந்திய வீரர்களுடன் சேர்ந்து நான் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங் தொடர்பாக என்னால் நிறைய பங்களிக்க முடியும் என்று உணர்கிறேன். இளைஞர்களுடன் இணைந்து என்னால் நிச்சயம் பணியாற்ற முடியும். அவர்களுக்கு நுட்பம் மட்டும் அல்லாமல், மன ரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் என்னால் உதவ முடியும்.

பெரிய போட்டிகள் வரும் பொழுது நாம் உடல் ரீதியாக தயாராகிறோம். ஆனால் மனரீதியாக தயாராகிறோமா என்று தெரியவில்லை. இதற்கு இளைஞர்களை ஊக்குவிப்பது, அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களது விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்று கற்பிக்க வேண்டும். இதுவே எங்களுக்கு முக்கிய சவாலாக இருந்தது.

இந்தியாவிடம் நல்ல கிரிக்கெட் இருக்கிறது. மேலும் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால் முழு அணியும் இப்படி இருக்க வேண்டும். ஒன்று இரண்டு வீரர்கள் மட்டும் இப்படி இருந்தால் போதாது” என்று கூறியிருக்கிறார்.