இந்த ஆஸ்திரேலிய வீரர்கள் போல் இருக்க நினைக்கிறேன் ; என் இலக்கு வேறு – ஷர்துல் தாகூர் மாஸ் பேச்சு!

0
1147
Shardul

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் உள்நாட்டில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிய பிறகு இவருக்கான வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. மேலும் தீபக் சஹரும் வேகப்பந்து வீசுவதோடு பேட்டிங்கும் செய்யக் கூடியவராக இருப்பதால் இவருக்குப் பிரதான வீரர்கள் யாரும் விளையாடாத பொழுது மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் இவர் ஆட்டத்திற்குள் ஏதாவது ஒரு இடத்திலாவது தனது முத்திரையைப் பதிக்கும் செயலை காட்டி விடுவார். இவர் இருக்கும் ஆட்டத்தில் இவரது பங்களிப்பு என்பது கட்டாயம் ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே தீரும்.

தற்பொழுது தனது இலக்கு மற்றும் கனவு குறித்து பேசியிருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” சில நேரங்களில் நாங்கள் 350 ரன்கள் இருக்கும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம். இப்படியான போட்டிகளில் எல்லா பந்து வீச்சாளர்களுமே ரன்களுக்கு போவார்கள். நாங்கள் ஒரு அணியாக எப்பொழுதும் முழுதாக எதிரணியிடம் சரணடையும் ஆட்டத்தை விளையாடியது கிடையாது. தோல்வி என்றாலும் சண்டையிட்டுத்தான் முடிவைப் பெறுவோம். நாங்கள் சில தோல்விகளை மட்டுமே சந்தித்து பெரும்பாலும் தொடரை 2-1 என வெற்றிகரமாகவே முடித்துள்ளோம் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். பேட்டிங்கில் 7,8,9வது இடத்தில் பந்துவீச்சாளர்கள் ரன் பங்களிப்பை தருவது அணிக்கு மிகவும் பயனுள்ள ஒரு விஷயம். நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க் பின்வரிசையில் பங்களிப்பை தருவது போல நான் செயல்பட விரும்புகிறேன். 15, 20 ரன்கள் இப்படி கிடைப்பது அணிக்கு வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்கும். மேலும் பேட்டிங் டெப்த் அதிகமாக இருக்கும் பொழுது, துவக்க ஆட்டக்காரர்கள் தைரியமாக விளையாட முடியும் ” என்று கூறினார்.

மேலும் தனது இலக்கு பற்றி பேசிய அவர்
” உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரிய கனவாகும். இந்த முறை எனக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் பரவாயில்லை. என்னுடைய இலக்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதுதான். நான் அதை நோக்கித்தான் தயாராகி வருகிறேன்” என்று கூறிஉள்ளார்!