“எல்லோருக்கும் ஒரு வாய்ப்பாவது தரவே நினைக்கிறேன்!” – வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
3789
Hardikpandya

இந்திய அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் விளையாடுகிறது!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இசான் கிசான் 36 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல பங்களிப்பு தந்தார். மற்றவர்கள் எல்லோரும் பேட்டிங்கில் ஏமாற்றம் அளிக்க, தனி ஒருவராக நின்று நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 51 பந்துகளில் 111 ரன்களை 11 பவுண்டரி மற்றும் ஏழு சித்தர்களுடன் எடுத்தார் சூரியகுமார் யாதவ். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

இதற்கடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் பகுதி நேர பந்துவீச்சாளரான தீபக் ஹூடா 2.5 ஓவர்கள் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்று முன்னிலையில் இருக்கிறது.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
” இது ஒரு முழுமையான வெற்றி. இதைவிட முழுமையான செயல் திறனை வெளிப்படுத்தி விட முடியாது. சூரியகுமார் யாதவ் எங்களை ஒரு 30 ரன்கள் முன்னோக்கி செல்ல வைத்தார். அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் மிகவும் சரியாகச் செயல்பட்டார்கள். ஆட்டத்தில் ஆக்ரோஷமாக இருப்பது என்பது ஒவ்வொரு பந்தையும் அடிக்கப் போவது அல்ல. அது உங்களின் அணுகுமுறை மற்றும் உடல் மொழி. நாங்கள் இந்த ஆட்டத்தின் எல்லா பெட்டிகளையும் டிக் செய்தோம். மழையினால் உண்டான தண்ணீரால் பந்து வீசுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய திட்டத்தில் சரியாக செயல்பட்டார்கள். ஆறாவது பந்துவீச்சாளராக நான் பலமுறை பந்துவீசி உள்ளேன். இந்த விஷயத்தில் நாம் முன்னோக்கி செல்ல இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா ” எப்போதும் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய நாளை பெரிதாக கொண்டாட மாட்டார்கள். நாம் அவர்களுக்கு நிறைய விளையாட்டு நேரத்தை வழங்க வேண்டும். இன்று தீபக் ஆறாவது பந்துவீச்சாளராக ரன்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தினார். அந்த இரண்டு ஓவர்களும் ஆட்டத்தில் மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கியது. அவர்கள் இன்னும் தொழில்முறையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஆதரவளிக்க தொடர்ந்து வாய்ப்புகள் தர வேண்டும். மேலும் ஒருவரை ஒருவர் நன்றாக ஆதரித்து ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். அடுத்த போட்டியில் மாற்றங்கள் இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்த போட்டிக்கான ஆடுகளத்தை முதலில் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கவே நான் விரும்புகிறேன். ஒரு பந்துவீச்சாளர் குறைவாக போவது பற்றி யோசிக்க வேண்டும் ” என்று தெரிவித்து இருக்கிறார்!