இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றி இவரால் தான் சாத்தியமாகும் – முன்னாள் வீரர் கணிப்பு!

0
489

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இவரின் ஆட்டம் திருப்புமுனையாக அமையும் என்று இந்திய வீரருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் சஞ்சய் மஞ்சுரக்கர்.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, முதல் கட்டமாக செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது. 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்துவரும் விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் சரிவை சந்தித்திருந்தார்.

ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்தார். இவரது சராசரி 92 ஆகும். மேலும் குறிப்பிடத்தக்கவிதமாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 147 ஆகும். நல்ல ஃபார்மிற்கு திரும்பி வரும் விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டியில் 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்து கூடுதல் நம்பிக்கையையும் அளித்தார். சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இவை அனைத்தையும் வைத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விராட் கோலியின் ஆட்டம் திருப்புமுனையாக அமையும். மேலும் முதல் டி20 போட்டியில் இவரது ஆட்டம் நன்றாக அமைந்தால் இந்திய அணியின் வெற்றி உறுதி என்று பேட்டியளித்துள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

- Advertisement -

“ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி ரன்களை குவித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி எப்படி தனது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ! அதே போன்ற தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி வருகிறார். இந்த சில ஆண்டுகள் இவரது ஆட்டத்தில் போதிய பவர் இல்லை. மீண்டும் ரன்களை குவித்து வருவதால் மெல்ல மெல்ல தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி வருகிறார்.

மனதளவிலும் நிறைய நம்பிக்கையை வளர்த்திருக்கிறார். எடுத்தவுடன் வேகமாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்காமல், சிறிது நேரம் ஆட்டத்தின் போக்கை கணித்து நம்பிக்கை வளர்த்து பிறகு ரன்களை அடிக்க முற்படுகிறார். இந்திய அணிக்கும் இவர்மீது மீண்டும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா தொடரில் இவரது ஆட்டம் கவனிக்கத்தக்கவிதமாக இருக்கும். முதல் டி20 போட்டியில் இவர் ஆடும் விதத்தை வைத்து தொடர் முழுவதும் எப்படி விளையாடுவார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மேலும் இந்த தொடரில் பெரும் நம்பிக்கை, டி20 உலக கோப்பை தொடரிலும் இருக்கும் என்பதால் கவனத்துடன் விளையாட வேண்டும்.” என்று தனது பேட்டியில் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்தார்.