நாளை மதியம் துபாயில், அடுத்த வருடம் நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
இதில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளுக்கும் வெவ்வேறு வகையான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சில அணிகளுக்கு ஒரே மாதிரியான வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
பெரும்பாலும் ஐபிஎல் ஏலத்தில் மிகவும் சாதுரியமாக செயல்படும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் வாங்கும் வீரர்கள் ஆரம்பத்தில் பெரிதாக தெரிய மாட்டார்கள். ஆனால் ஒரு அணியாக இணையும் பொழுது அவர்கள் பெரிய வீரர்களாக மாறுவார்கள்.
உதாரணமாக துவக்க வீரர்களுக்காக மற்ற அணிகள் பெரிய விலை கொடுத்து மெகா ஏலத்தில் வீரர்களை வாங்கிய பொழுது, இந்திய கண்டிசனில் சிறப்பாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரரான டெவோன் கான்வேவை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இவர் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் நடக்க இருக்கும் எனி எழுத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரர்களை வாங்கும் என்று பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரைதான் பெரிதும் விரும்பும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அவர்கள் நிச்சயம் ஒரு வேகப்பந்துவீச்சாளரை வாங்கவே விரும்புவார்கள். ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஜெரால்டு கோட்ஸிதான் அந்த வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். அவர்கள் அவரை வாங்க விரும்பினால் நிச்சயம் வாங்க முடியும். 10 முதல் 14 கோடி கொடுப்பார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் முழுமையான ஒரு வேகப்பந்துவீச்சாளரை பெற விரும்புகிறது. அதற்கு சரியான ஆள் ஜெரால்ட் கோட்ஸி. அவரால் ஆட்டத்தில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் பந்து வீச முடியும். மகேந்திர சிங் தோனி பல டைமென்ஷன் கொண்ட வீரர்களை விரும்பினாலும் கூட, வேகத்தின் காரணமாக இவர் விதிவிலக்காக இருக்க முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நிறைய பணம் இருக்கிறது. மேலும் அவர்களுக்கு ஒரு இந்திய பேட்டர் தேவைப்படுகிறார். எனவே அவர்கள் மனிஷ் பாண்டேவை வரவேற்கலாம். இல்லையென்றால் கருண் நாயரை வாங்கலாம்.
இவர்கள் மட்டும் இல்லாமல் சென்னை பையன் ஷாருக்கான் இருக்கிறார். இவரை வாங்க சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும். சென்னை நினைத்தால் வாங்க முடியும். ஆனால் அவர்கள் சென்னை பையன் என்பதற்காக ஆவேசப்பட்டு ஏலத்தில் இறங்கக் கூடியவர்கள் கிடையாது” என்று கூறி இருக்கிறார்!