“சதம் அடிச்சேன் ஆனா தோத்துட்டோம்.. கவலை கிடையாது.. காரணம் இதான்!” – ருதுராஜ் வெளிப்படையான பேச்சு!

0
1515
Ruturaj

நேற்று அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 222 ரன்கள் குவித்தது.

நேற்றைய போட்டிகள் தனி ஒரு வீரராக நிலைத்து நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

- Advertisement -

குறிப்பாக அவர் தனது இன்னிங்ஸை முதலில் மிகவும் மெதுவாகவே ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைத்தது. மேலும் இந்திய அணி இரண்டு விக்கெட்களை வேகமாக இழந்தது.

இதன் காரணமாக சூரியகுமார் யாதவுடன் இணைந்து பொறுமையாக ஆரம்பித்து நகர்ந்த அவர், சூரியகுமார் ஆட்டம் இழந்ததும் வெகு வேகமாக தனது இன்னிங்ஸை மாற்றியமைத்தார்.

போட்டி செல்ல செல்ல ஓவர்கள் நெருங்க நெருங்க அவருடைய பேட்டிங் அதி தீவிரமான அதிரடிக்கு மாறியது. 52 பந்துகளில் சதம் அடித்த அவர் தொடர்ந்து முன்னேறி 57 பந்துகளில் 123 ரன்கள் என்று முடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும், இறுதியில் ரன்களை விட்டு தந்து இந்திய அணிக்கு தோல்வியை கொண்டு வந்தார்கள். இறுதிக்கட்டத்தில் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு இந்திய ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றத்தில் தள்ளி இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும் பொழுது ” கிட்டத்தட்ட ஈரமான ஒரு பந்தில் பந்து வீசுவது போலான சூழ்நிலையில், இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன். இது மாதிரியான நிலைமைகளில் ஒரு ஓவருக்கு 12 முதல் 14 ரன்கள் கிடைக்கும்.

முதல் ஆட்டத்தில் நாங்கள் 210 ரன்களை துரத்தி வெற்றி பெற்றோம். பந்துவீச்சாளர்களுக்கு இங்கு நிலமைகள் சற்று கடினமானவை. நாங்கள் இதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேறி போக வேண்டும்.

மேக்ஸ்வெல் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஏழு ஓவர்களில் நூறு ரன்களும், மூன்று ஓவர்களில் 50 ரன்களும் தேவைப்பட்ட சூழ்நிலையில், அணியை வெற்றி பெற வைத்தது மிகவும் சிறப்பான செயல்பாடு.

எங்கள் தரப்பில் இருந்து எங்களது பந்துவீச்சாளர்கள் தங்களிடம் உள்ளதை செயல்படுத்த முயற்சி செய்தார்கள். ஆட்டத்தை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். ஆனால் சுற்றிலும் பனிப்பொழிவு நிறைய இருந்தது. இதனால் பந்து நிறைய நழுவியது. பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!