“டிவில இதை பார்த்தேன்.. பவுலிங்க மாத்தினேன்.. விக்கெட்டை அடிச்சேன்” – ஐந்து விக்கெட் கைப்பற்றிய பிறகு அஷ்வின் பேச்சு!

0
1070
Ashwin

மூன்று வடிவில் ஆன கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று டொமினிக்கா மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாசை வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையின் முதல் சரிவை ரவிச்சந்திரன் அஸ்வின் ஜூனியர் சந்திரபால் விக்கெட்டை கிளீன் போல்ட் செய்து கைப்பற்றினார். இந்த முறையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

தொடர்ச்சியாக அவரது சுழற் பந்துவீச்சு மாயாஜாலத்தில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அவ்வப்போது விக்கெட்டுகளை கொடுத்து சிக்கிக் கொண்டது. இன்னொரு முனையில் அவரது சுழல் கூட்டாளி ரவீந்திர ஜடேஜாவின் தாக்குதலும் மிகச் சிறப்பாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரண்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 24.3 ஓவர்கள் பந்துவீசி, ஆறு மெய்டன்கள் செய்து, 60 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்று விக்கெட் ஏதும் இழக்காமல் 80 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணி தரப்பில் துவக்க வீரராக வந்த அறிமுக வீரர் ஜெய்சுவால் நாற்பது ரண்களும், கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களும் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

ஐந்து விக்கெட் கைப்பற்றி ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்
“இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நான் உடல் அளவிலும் மனதளவிலும் விளையாடுவதற்கு தயாராக இருந்தேன். அதே சமயத்தில் விளையாடாமல் இருப்பதற்கும் தயாராகவே இருந்தேன். இதை நான் எப்படி பதில் சொல்வது? நாங்கள் அந்த போட்டியில் துரதிஷ்டவசமாக தோற்றுவிட்டோம் அவ்வளவுதான்.

உலகில் எந்த மனிதனும் தாழ்வை சந்திக்காமல் உயர்ந்து சென்றான் என்கின்ற சரித்திரமே கிடையாது. தாழ்வான நாட்கள் உங்களுக்கு இருக்கும் பொழுது அது சில சந்தர்ப்பங்களை உங்களுக்கு தருகிறது. நீங்கள் அதைப் பற்றி பேசலாம் இல்லை புகார் செய்யலாம் இல்லை அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். நான் என்னுடைய தாழ்வான நிலைகளிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியவன்.

என்ன நடந்தது என்பது எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது. நாங்கள் இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் நாங்கள் இரண்டிலும் தோல்வி அடைந்திருக்கிறோம். தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. எனவே இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஜெய்ஷ்வால் ஒரு துடிப்பான மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர். அவர் தனது வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை செய்வார் என்று நான் நம்புகிறேன். அவரிடமிருந்து நாம் சில சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கப் போகிறோம்.

ஐந்து விக்கெடுகள் கைப்பற்றியது நல்ல ஒரு செயல் திறன் என்று நினைக்கிறேன். ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஈரப்பதம் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பந்து சுழல ஆரம்பித்தது. இதைப் பிறகு நான் டிவியில் பார்த்தேன். பின்னர் இந்த சுழற்சி அதிகமாக மாறத் தொடங்கியது. ஆடுகளம் உலர்ந்ததால் இது நடந்தது.

நாம் நமக்கு கிடைக்கும் விக்கெட்டில் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் சரியான வேகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் என்பது வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி நாம் உடனுக்குடனே மாறிக் கொள்வதுதான்!” என்று கூறி இருக்கிறார்!