“4 ஓவர் மட்டும்தான் பார்ப்பேன்.. அதுக்கு மேல என் இஷ்டத்துக்குதான் அடிப்பேனு சொன்னேன்!” – ஆட்டநாயகன் பகார் ஜமான் அசத்தல் பேட்டி!

0
1554
Fahar

தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் எப்படி ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறதோ, அதேபோல் மந்தமான பேட்டிங்கும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே மேல் வரிசையில் துவக்க இடத்தில் அதிரடி வீரர் பகார் ஜமான் எப்பொழுதும் இடம் பெற்று வந்தார். ஆனால் ஆசியக் கோப்பை தொடரின் போது அவருடைய பார்ம் மிகவும் மோசமாக இருந்தது.

- Advertisement -

மேலும் உலகக் கோப்பையில் பெற்ற வாய்ப்பிலும் அவரது மோசமான பார்ம் தொடர்ந்தது. இதன் காரணமாக அவர் இடையில் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் அப்துல்லா ஷபிக் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் வாய்ப்பு பெற்ற அப்துல்லா ஷபிக் நல்ல முறையில் விளையாட, இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை.

இன்று இமாம் நீக்கப்பட்டு மீண்டும் பகார் ஜமானுக்கு வாய்ப்பு தரப்பட்டது. 205 ரன்கள் இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய பகார் ஜமான் அதிரடியாக 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் வெற்றி பெற்றது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் அவர் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் முக்கியமான நேரத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை அவர் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய அவர் கூறும் பொழுது “எனக்கு கிடைத்த ஓய்வு நேரம் உதவி இருக்கிறது. நான் நிறைய பயிற்சி செய்தேன். அப்பொழுது பயிற்சி முகாமில் நான் நல்லபடியாக உணர்ந்தேன். நான் எப்போதும் பெரிய ஸ்கோர் செய்ய விரும்பக் கூடியவன். ஆனால் இது கிரிக்கெட் அப்படியெல்லாம் நடக்காது.

நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது அப்துல்லாவிடம் ‘நான் முதல் நான்கு ஓவர்களை பார்ப்பேன். அதற்குப் பிறகு ஆடுகளம் எப்படி இருந்தாலும் அது குறித்து பொருட்படுத்தாமல் நான் சிக்ஸர்கள்தான் அடிப்பேன்!’ என்று சொல்லியிருந்தேன்.

ஏனென்றால் என்னால் முடியும் என்று எனக்கு தெரியும். அணியில் என்னுடைய பங்கு என்னவென்றும் எனக்குத் தெரியும். எங்களுடைய மனதில் ரன் ரேட் ஓடிக்கொண்டிருந்தது.

நாங்கள் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிறகு 30 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க நினைத்தோம். பல தோல்விகளுக்குப் பிறகு நான் ஒரு 30 ரன்கள் எடுக்க முதலில் விரும்பினேன். வரும் ஆட்டங்களில் இதை பெரிதாக்குவேன் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!