இங்கிலாந்து கிரிக்கெட்டின் வெற்றிக்கரமான வீரர்களில் பென் ஸ்டோக்சும் ஒருவர். குறிப்பாக மாடர்ன் கிரிக்கெட் காலத்தில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். அவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால், அவர் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் சாதிக்க வாய்ப்பு ஏற்படுகிறது!
ஒருநாள் போட்டிகளில் அவரது பங்களிப்பு பெரியது என்றால் டெஸ்ட் போட்டிகளிலும் அவரது பங்களிப்பு பெரியதாகவே இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஹெட்டிங்லி லீட்சில் கடைசி விக்கெட் ஜாக் லீச்சை வைத்துக்கொண்டு ஆசஷ் போட்டியில் 135 ரன் குவித்து அணியை வெற்றிபெற வைத்ததை இங்கிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் தாண்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் இரசிகர்களை அவ்வளவு எளிதாய் மறக்க மாட்டார்கள்.
நேற்று முன்தினம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டி உள்ளதாலும், நிறைய போட்டிகள் இருப்பதாலும், தன் உடல் ஒத்துழைக்க மறுப்பதால், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னால் தொடர முடியவில்லை என்று கூறி இருந்தார். நேற்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியோடு, அவரது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது!
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்தான் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியதிருக்கும். இதனால் சமீபக் காலத்தில் போட்டிகள் தொடர்ச்சியாய் இருப்பதால், வீரர்களால் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது சிரமம் ஆகிறது. இதுபற்றிய ஒரு விவாதம் சமூக வலைத்தளத்தில் போக அதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
இதுபற்றி கெவின் பீட்டர்சன் கூறும்பொழுது “நான் 2012ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பொழுது, டி20 போட்டிகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட்டின் முடிவு அப்படி இருந்தது. இல்லையென்றால் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விளையாடி இருப்பேன்” என்று கூறி இருக்கிறார்.
கெவின் பீட்டர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பொழுது, இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநராக அப்போதிருந்த ஹக் மோரிஸ் “ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் ஆக்கமும் திட்டமிடுதலும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை என்பதால் எங்களிடம் ஒரு தேர்வுகொள்கை உள்ளது. ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்பாத வீரர்களை டி20 போட்டியில் தேர்வு செய்யமாட்டோம். இதனால் பீட்டர்சனை தேர்வுசெய்வதில்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!