“எல்லோரையும் பார்க்க மனசு வருத்தமா இருந்துச்சு.. 500-600 பந்துகள் விளையாடறேன்” – சர்பராஸ் கான் சிறப்பு பேட்டி

0
547
Sarfaraz

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயத்தின் காரணமாக கேஎல்.ராகுல் விலகி இருப்பதால், அவருடைய இடத்திற்கு சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை மாநில அணிக்காக கடந்த மூன்று ரஞ்சி சீசன்களில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்த வீரராக இந்திய அளவில் இவர்தான் இருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக கடந்த ஆண்டிலேயே இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பிலும் இவருக்கு ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதுவே நடந்தது. ஆனால் விரும்பத்தகாத வகையில் கேஎல்.ராகுல் காயம் அடைய இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தேர்வு செய்யப்படுவதற்கும் முன்னால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 161 ரன்கள் 160 பந்துகளில் அடித்திருந்தார். பிளேயிங் லெவனில் வாய்ப்பு உறுதியா என்று தெரியாத நிலையில், தான் எப்படி கிரிக்கெட் வீரராக உருவாகி வந்தேன்
என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

சர்பராஸ் கான் கூறும் பொழுது ” நான் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜாவித் மியான்தத் ஆகியோர் விளையாடியதை பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக என்னுடைய பேட்டிங் ஸ்டைல் ஜாவித் மியான்தத் போல இருப்பதாக என் தந்தை கூறுவார்.

மேலும் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களாக யாரெல்லாம் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை நான் பார்ப்பேன். அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்நாட்டு கிரிக்கெட்டோ எதிர்காலத்தில் இந்திய அணிக்காகவோ விளையாடும் பொழுது நான் இதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

என் தந்தைதான் எனக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார். நான் தாக்குதல் பாணி கிரிக்கெட்டர். எனவே நான் விரைவில் ஆட்டம் இழந்து விடுவேன். நான் இப்படி ஆட்டம் இழந்து வெளியே இருக்கும் பொழுது மற்றவர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க வருத்தமாக இருக்கும். ஆனால் என் அப்பா என்னிடம் இருந்த கடின உழைப்பை நம்பினார். என்னிடம் உள்ள அனைத்தும் அந்த உழைப்பின் வழி வந்ததுதான்.

நாங்கள் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு குடி போயிருந்த பொழுது கூட, என் தந்தை நான் விளையாடுவதை பார்ப்பதற்காக விமானம் ஏறி வருவார். ஏதாவது கிரிக்கெட் செலக்சன் இருக்கும் பொழுது அவர் எனக்கு மொட்டை மாடிகளோ அல்லது தெருவிலோ பந்துகள் வீச ஆரம்பிப்பார்.

எனக்கு உத்தரப்பிரதேச அணிக்காக இரண்டு சுமாரான சீசன்கள் அமைந்தது. அதன் பிறகு நான் மும்பைக்கு திரும்பி வந்த பொழுது, எனது தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று அஞ்சினேன். எனக்கு முன்னால் எதிர்காலம் இல்லை என்று நினைத்தேன்.

எளிதில் திருப்தி அடையாததுதான் என்னுடைய பலம். தினமும் 500 முதல் 600 பந்துகள் விளையாடுவேன். ஒரு போட்டியில் குறைந்தது 200 முதல் 300 பந்துகள் விளையாடாமல் விட்டால் அது மிகவும் மோசமானது என்று நான் நினைக்கிறேன். இது இப்பொழுது எனது பழக்கமாக மாறிவிட்டது.

இதையும் படிங்க : “டி20 உலக கோப்பை 2024.. இந்த இரண்டு அணிகள்தான் இறுதி போட்டிக்கு வரும்” – கேசவ் மகாராஜ் கணிப்பு

நீங்கள் ஐந்து நாள் கிரிக்கெட்டை விளையாட விரும்பினால், நீங்கள் பொறுமையாக இருந்து ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும். நான் நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுகிறேன். அதனால்தான் நான் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.