“நான் வாழும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை” – காரல் ஹூப்பர் மனமுடைந்து வேதனை!

0
32512
Hooper

உலகக் கிரிக்கெட்டில் 70, 80களில் மிகப்பெரிய ஆதிக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி நிலைநாட்டி இருந்தது. முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை அவர்களே வென்றார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டங்களை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து அப்போதைய கேப்டன் கிளைவ் லாயிட் ஒரு சாம்பியன் அணியைக் கட்டியிருந்தார். அவருக்குப் பிறகு விவியன் ரிச்சர்ட்ஸ் அணியைக் கொண்டு சென்றாலும் பழைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியவில்லை. பிறகு மெல்ல மெல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விழுந்தது.

- Advertisement -

இதற்கடுத்து மாடர்ன் கிரிக்கெட் காலத்தில் டேரன் சமி வந்து அணி வீரர்களை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து, இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றார். ஆனால் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறியது. மேலும் அடுத்த நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் பிரைன் லாரா காலத்தில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த கார்ல் கூப்பர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிலையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 20 சதங்களும், 300 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ல் ஹூப்பர் பேசும் பொழுது “நான் மற்ற அணிகளை அவமரியாதை செய்யவில்லை. நான் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டின் தற்போதைய நிலையைச் சொல்கிறேன். நாங்கள் இப்பொழுது ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் அமெரிக்கா, நேபாளம் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற அணிகளுடன் விளையாட வேண்டி இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி எங்களை விட முன்னாள் இருக்கிறது. பங்களாதேஷ் அணியும் எங்களை விட முன்னேறி இருக்கிறது. இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? என்றால் முடியும். நாங்கள் இதற்கடுத்தும் சரியாக விளையாடவில்லை என்றால் இன்னும் கீழே செல்வோம்.

என் வாழ்நாளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் இப்படி ஒரு நிலையைச் சந்திக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது. நாங்கள் இப்பொழுது ஜிம்பாவேயில் இருக்கிறோம். அடுத்து ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறோம் அந்தப் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும்.

நாங்கள் இப்பொழுது தயாராக இருக்கிறோம். டேரன் சமி உங்களுக்கு நல்ல உத்வேகத்தை தரக்கூடிய அற்புதமான தலைவர் என்று நினைக்கிறேன். இப்போது அவர் தலைவராக வந்திருக்கிறார். அவர் நன்றாக முயற்சி செய்கிறார். இது உலகக் கோப்பை தகுதி சுற்றில் எங்களைக் கொண்டு சேர்க்க சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!