“நான் இதை எதிர்பார்க்கவே இல்லை” – அர்ஸ்தீப் சிங் பயிற்சியாளர் வேதனை!

0
106
Arshdeep singh

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்பது உண்மைதான். ஆனால் நேற்று ஆசிய கோப்பையில் இரண்டாவது சுற்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிக்கொண்ட போட்டி வழக்கத்தைவிட கூடுதலான பரபரப்பாக அமைந்தது, இது இந்திய அணியின் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங்க்கு வேதனையாக அமைந்து விட்டது என்று கூறலாம்.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஆட்டத்தின் 18-வது ஓவரை இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரில் அவரின் ஒரு பந்தை பாகிஸ்தான் அணியின் ஆசிப் அலி தூக்கி அடிக்க, பந்து தவறி காற்றில் எழும்பி கல்லி திசையில் நின்ற, அர்ஸ்தீப் சிங்கிடம் எளிய கேட்ச் ஆக மாறியது. ஆனால் அதை அவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தவறவிட்டார்.

- Advertisement -

அந்த கேட்சை அவர் தவற விட்ட பிறகு பாகிஸ்தான் அணியின் ஆசிப் அலி ஆட்டத்தின் 19வது புவனேஸ்வர் குமார் ஓவரில், ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து பாகிஸ்தான் வெற்றியை மிகவும் எளிதாக்கி விட்டார். ஆனாலும் ஆறு பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற சூழலில் கடைசிவரை மிகச் சிறப்பாகவே அர்ஸ்தீப் சிங் பந்து வீசினார். ஆனாலும் போட்டியில் இந்திய அணி தோற்க, சமூகவலைதளத்தில் இந்திய அணியின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அவருக்கு எதிராக திரும்பிவிட்டனர்.

அர்ஸ்தீப் சிங் மீதான இந்திய அணி ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனங்கள் எல்லை கடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளம் வீரரான அவருக்கு ஆதரவு தெரிவித்தும் ஹர்பஜன்சிங் மற்றும் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், விராட் கோலி போன்றவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.

இந்த நிலையில் அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஜஸ்வந்த் ராய், சமூக வலைதளங்களில் எல்லை மீறி விமர்சனம் வைக்கும் இந்திய ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் நினைக்கவே இல்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதைப்பற்றி அவர் தெரிவிக்கும் போது ” இப்படி ஒரு நிலை வரும் என்று நான் நினைக்கவே இல்லை. கேட்சை விட்டதற்காக அவர் இவ்வளவு தூரம் ட்ரோல் செய்யப்பட்டு இருக்கக்கூடாது. இது விளையாட்டின் ஒரு பகுதி. மேலும் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு இன்னும் வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது. பாகிஸ்தான் பேட்டர்கள் சிறப்பாக பேட் செய்தார்கள். அவர்கள் விளையாடிய விதத்தை மக்கள் பாராட்ட வேண்டும். விளையாட்டை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கவும், இப்படியானவைகளை ட்ரோல் செய்யவும் வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் “என்று தன்மையாக கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்தியாவில் மக்கள் கிரிக்கெட்டைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப் படுகிறார்கள். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் போட்டியின்போது. கேட்ச்சை தவறவிடுவது எல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதி. இதே மக்கள் அவர் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் 2 விக்கெட்டுகளை பெற்ற பொழுது அவரைப் பாராட்டினார்கள். ஒரு கேட்சை தவற விட்டதை பிரச்சனை ஆக்குவது தவறு” என்று அழுத்தி சுட்டிக்காட்டினார்!