ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நேற்று இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் விளையாடி முடித்தனர். இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 377 ரன்களும், ஆஸ்திரேலிய மகளிரணி 241 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தனர்.
கடைசி நாளான நேற்று 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டியும் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் 127 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 31 ரன்களும் குவித்த ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்திய மகளிர் அணி குறித்து பெருமையாக பேசிய மிதாலி ராஜ்
போட்டி முடிந்ததும் பேசிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முதல் இரண்டு நாட்களில் மழை காரணமாக 80 ஓவர்கள் வீணாகின. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது என்று அனைவரையும் பாராட்டினார். முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி அமைந்த வேளையில், ஸ்மிருதி மந்தனா சதமடித்த விதம் பாராட்டுக்குரியது என்று கூறினார்.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் என பூஜா வஸ்த்ரக்கர் மிக அற்புதமாக பந்து வீசினார். டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய ஆட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக அற்புதமாக பேட்டிங் செய்வார். இந்த போட்டியில் அவர் பவுலிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது என்று கூறினார்.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணியில் இருந்த அனைவரும் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர். அதேபோல இந்த டெஸ்ட் போட்டி அமைந்தது. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இவ்வாறு இந்திய மகளிர் அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடியது வரவேற்புக்குரியது என்று மிதாலி ராஜ் பெருமையுடன் கூறினார்.
மகேந்திர சிங் தோனி இடம் நான் இதை கற்றுக்கொள்ள வேண்டும்
இப்போட்டியில் டாஸில் தோல்வியடைந்த மிதாலிராஜ், மகேந்திர சிங் தோனி இடம் எப்படி ஒவ்வொரு போட்டியிலும் டாஸில் வெற்றி பெறுவது என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். மேலும் பேசிய அவர், தற்பொழுது மகளிர் வீரர்கள் அனைவரும் மூன்று வகை கிரிக்கெட் பார்மெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர். எனவே இனி போட்டிகளை ஒருங்கிணைக்கும் பொழுது, மூன்று வகை கிரிக்கெட் பார்மெட் தொடர்களை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்மிருதி மந்தனா, முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சதம் அடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர் தற்போது எனது கனவு கவனம் அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற உலக கோப்பை தொடர் மீது உள்ளது என்று கூறினார். அடுத்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் தேதி ஐசிசி மகளிர் அணி உலக கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. ஸ்மித் மந்தானா தலைமையில் இந்திய மகளிர் அணி உலக கோப்பை தொடரில் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது