ரோகித் சர்மா என்கிட்ட சொல்லி அனுப்பியது ஒன்னு மட்டும் தான் – ‘ஆட்டநாயகன்’ ஷர்துல் தாக்கூர் பேட்டி!

0
3387

ரோகித் சர்மா தன்னிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்பதை பகிர்ந்துள்ளார் ஷர்துல் தாக்கூர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் அடித்தது. கில் 112 ரன்கள், ரோகித் சர்மா 101 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 54 ரன்கள் அடித்தனர்.

இமாலய இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் டெவான் கான்வெ 138 ரன்கள் அடித்தார். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டேரல் மிட்ச்சல், டாம் லேத்தம், கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். இது இந்திய அணிக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

பேட்டிங்கில் 25 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது ரோகித் சர்மா கொடுத்த நம்பிக்கை, தனக்கு இருந்த நம்பிக்கை இரண்டையும் பற்றி பகிர்ந்துள்ளார். தாக்கூர் பேசியதாவது:

“அணி வீரர்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். ரோகித் சர்மா எனக்கு நம்பிக்கை கொடுத்து வந்தார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அவர் கொடுத்த நம்பிக்கை என்னை அடுத்தடுத்த சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவியது.

எதிரணி வீரர் எனது பந்தை அடிக்க துவங்கினால் உடனடியாக பதறிவிடாமல், நாம் அந்த குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்க வேண்டும். இதைத்தாண்டி நான் வேறு எதுவும் யோசித்து குழம்பிக்கொள்ள மாட்டேன். அதேபோல் எப்போது எந்த சூழ்நிலை வரும் என்று தெரியாது. எல்லாவற்றற்கும் தயாராக இருக்க வேண்டும்.

அணியில் எனது பேட்டிங் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. சமகாலத்தில் அனைவரும் பேட்டிங் நன்றாக விளையாடி வருகின்றனர். அனைவருக்கும் பேட்டிங் செய்ய மிகவும் பிடித்திருக்கிறது. நானும் அப்படிப்பட்ட ஒருவன் தான்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “துவக்க ஓவர்கள் சிலவற்றில் நான் பௌண்டரிகளாக கொடுத்து விட்டேன். உடனடியாக ரோகித் சர்மா என்னிடம் வந்து, உன்னுடைய இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்து ரன்கள் நிறைய இருக்கிறது. எளிதாக கட்டுப்படுத்தி விடலாம். உன்னுடைய இயல்பான வந்து வீச்சை வெளிப்படுத்தினாலே எளிதாக விக்கெட் எடுத்து விடலாம் என்று அறிவுறுத்தினார். அந்த நம்பிக்கை எனக்கு பெரிதாக உதவியது.” என்றார்.