கடைசி ஓவர் ஸ்பின்னரா? ஸ்பீட் பவுலரா? டவுட்லயே இருந்தேன்; வருண் சிறப்பா முடிச்சு கொடுத்தான் – தமிழக வீரரை புகழ்ந்த நிதிஷ் ராணா!

0
3151

கடைசி ஓவர் யாருக்கு கொடுக்கலாம் என்ற சந்தேகத்தில் இருந்தேன். இன்றைய நாளில் என்னுடைய பெஸ்ட் பவுலரிடம் செல்லலாம் என்று வருண் சக்கரவர்த்திக்கு பவுலிங் கொடுத்தேன் என்று பேசியுள்ளார் நித்திஷ் ராணா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறி 171 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

சொந்த மைதானத்தில் இந்த இலக்கை சேஸ் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஓவர்களில் எய்டன் மார்க்ரம்(41) மற்றும் ஹென்ரிச் கிளாஸன்(36) இருவரும் போராடினர். ஆனால் இவர்களது போராட்டம் கடைசி வரை நீடிக்கவில்லை. விக்கெட் இழந்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது, கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். ஸ்பின்னருக்கு கொடுத்த இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் சரியான நேரத்தில் பார்மில் இருந்த அப்துல் சமாத் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி தூக்கினார்.

கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார் வருண் சக்ரவர்த்தி. போட்டி முடிந்த பிறகு, கடைசி ஓவரை எதற்காக வருண் சக்கரவர்த்திக்கு கொடுத்தேன்? மிடில் ஓவருக்கு பின் ஆட்டம் கொல்கத்தா அணியின் பக்கம் திரும்பியது எப்படி? ஆகிய கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணா.

- Advertisement -

“மிடில் ஓவர்களில் சில தவறான ஓவர்களை வீசிவிட்டோம். அந்த நேரத்தில் சூதாட்ட முடிவாக சர்துல் தாக்கூர் மற்றும் வைபவ் இருவருக்கும் ஓவர் கொடுத்தேன். அவர்கள் நன்றாக விளையாடி வந்த மார்க்ரம் மற்றும் கிலாசன் இருவரின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார்கள். அந்த இடத்தில் தான் நாங்கள் கம்பேக் கொடுத்தோம்.

மேலும் ஹைதராபாத் அணியை கடைசி ஓவர் வரை விட்டால், கண்டிப்பாக ஆட்டத்தை எடுத்துச் சென்று விடுவார்கள். ஆகையால் நடுவில் விக்கெடுகளை எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டோம்.

கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில், யாருக்கு அந்த ஓவரை கொடுப்பது என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. வேகபந்து வீச்சாளர்களா? அல்லது ஸ்பின்னரா? என்ற குழப்பத்தில் இருந்தபோது, அன்றைய நாளில் என்னுடைய சிறந்த பவுலருக்கு ஓவரை கொடுத்தேன். வருண் சக்ரவர்த்தி, பிட்ச்சை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.” என்று பேசினார்.