“2008 ஆர்சிபி-க்கு விளையாட விரும்பல.. என்னை மிரட்டி கையெழுத்து போட வச்சாங்க” – பிரவீன் குமார் பேட்டி!

0
187
Praveen

இந்திய வேகப்பந்துவீச்சுத் துறையில் மிகப்பெரிய பந்துவீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரவீன் குமாரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

பிரவீன் குமார் 2007 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 6 டெஸ்ட் 68, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் வருடத்தில் 2008 ஆம் ஆண்டு இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி 47 போட்டிகளில் 41 விக்கெட்டுகள் என சிறப்பாக முடித்தார். மேலும் 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக முதலில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கடுத்து பிரவீன் குமார் 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2014 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது இவரை யாரும் வாங்கவில்லை. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜாகீர் கான் விளையாட முடியாமல் போக இவர் அழைக்கப்பட்டார்.

இதற்கு அடுத்து 2015 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அப்போது புதிதாக வந்த குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இவர் மொத்தமாக 119 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

இதற்குப் பிறகு இவருடைய வாழ்க்கையில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று, இவர் வெளியில் வருவதையே தவிர்த்து விட்டார். பிறகு சமீபத்தில் தான் தமக்கு வாழ்க்கையில் என்ன நடந்தது என்று வெளியில் பேசி வருகிறார்.

இந்த வகையில் முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தான் விளையாட விரும்பவில்லை என்றும், மிரட்டி விளையாட வைக்கப்பட்டதாகவும் தற்பொழுது கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து பிரவீன்குமார் கூறும் பொழுது ” நான் ஆர் சி பி அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் என்னுடைய இடமான மீரட்டுக்கு அதிக தொலைவில் பெங்களூரு இருந்தது. எனவே அருகில் இருக்கும் டெல்லி அணிக்காக நான் விளையாட விரும்பினேன். இதனால் என்னால் தேவைப்படும் நேரங்களில் என் வீட்டிற்கு செல்ல முடியும். மேலும் எனக்கு பெங்களூர் உணவுகளும் பிடிக்கவில்லை.

ஆனால் என்னை ஒருவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார். அது எனக்கு முதலில் ஒப்பந்தம் என்றே தெரியாது. நான் டெல்லி அணிக்காக விளையாட விரும்புகிறேன் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் அப்பொழுது எனக்கு லலித் மோடி ஃபோன் செய்து கையெழுத்து இடாவிட்டால் என் கிரிக்கெட் வாழ்க்கையையே முடித்து விடுவதாக மிரட்டினார். இதனால்தான் நான் ஆர்சிபி அணிக்காக விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்!