” நான் சிறப்பாக விளையாடியதற்கு இவர்கள் தான் முக்கியக் காரணம் ” – ஆட்டநாயகன் விருது வென்ற அனுஜ் ராவத் பேட்டி

0
438
Anuj Rawat

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் பதினெட்டாவது ஆட்டம், மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில், ரோகித்தின் மும்பை அணிக்கும், பாஃப்-ன் பெங்களூர் அணிக்கும் இடையே நடந்து முடிந்துள்ளது.

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் மும்பையை பேட் செய்ய அழைக்க, மும்பைக்குத் துவக்கம் தர வந்த ரோகித்-இஷான் கூட்டணி அரைசத பார்ட்னர்ஷிப் தந்தது. ஆனால் அதற்குப் பின் நடந்தது எல்லாம் மும்பை அணிக்கான சாபம்போல் இருந்தது. கடகடவென்று 13.2 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் சரிந்துவிட்டது.

- Advertisement -

ஆனால் அடுத்து ஆட வந்த பவுலர் உனட்கட்டை வைத்துக்கொண்டு சூர்ய குமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடி 37 பந்துகளில் 68 ரன்களை குவித்து, மும்பை அணியை 151 என்ற கெளரவமான ஸ்கோரை எட்ட வைத்தார்.

பின்பு இலக்கை நோக்கி ஆட வந்த பெங்களூருக்கு கேப்டன் பாஃப் ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர் அனுஜ் ராவத் அபாரமாக ஆடி அரைசதமடித்து அணி வெல்ல பெரிதும் காரணமாய் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால்; இரண்டு ஓவர்களுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட, ஸ்ட்ரைக்கில் விராட்கோலி இருக்க, அந்த ஓவரை குட்டி ஏபிடி பிரிவிஸ் டிவால்டிற்கு தந்தார் ரோகித். குட்டி ஏபிடியின் முதல் பந்தையே விராட்கோலி காலில் வாங்க, அம்பயர் அவுட் தர, விராட்கோலி அப்பீல், சர்ச்சையான முறையில் அவுட் என்றே மூன்றாம் அம்பயர் அறிவித்தார். ஒருவழியாக விராட்கோலியின் விக்கெட்டை குட்டி ஏபிடி பறித்துவிட்டார்!

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற அனுஜ் ராவத் பேசும் பொழுது “நான் கடந்த மூன்று ஆட்டங்களாக சரியாக விளையாடவில்லை. ஆனால் கேப்டனும், அணி நிர்வாகமும் என்னை தொடர்ந்து ஆதரித்தார்கள். அவர்களை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்!