“நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்!” – இங்கிலாந்தை வீழ்த்திய முஜிப் உருக்கமான பேட்டி!

0
332
Mujeep

இன்று டெல்லியில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அவர்களை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது!

இன்று டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஒரு பந்தை மீதம் வைத்து ஆல் அவுட் ஆகி 284 ரன்கள் சேர்ப்பது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பிரதான பந்துவீச்சாளர்களும் பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்கள் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கட்டை கைப்பற்றி கொடுத்தார்கள். இதற்கு அடுத்து மீதி இங்கிலாந்தின் எட்டு விக்கெட்களுக்கு, ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான் மற்றும் முகமது நபி மூவரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பவர் பிளேவில் மிகச் சிறப்பாக பந்து வீசி ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்றிய முஜிப், மீண்டும் திரும்பி வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹாரி புரூக், கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றி கொடுத்து, ஆப்கானிஸ்தான அணியின் வரலாற்று வெற்றிக்கு கதவை திறந்து விட்டார்.

- Advertisement -

மேலும் முகமது நபி இரண்டு விக்கெட் ரஷீத் கான் மூன்று விக்கெட் கைப்பற்ற, ஆப்கானிஸ்தான அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக பெற்றது. முஜிப் பேட்டிங்கில் அதிரடியாக 16 பந்துகளில் 28 ரன்கள் அடித்திருந்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறும் பொழுது “உலகக் கோப்பைக்கு இங்கு வந்து சாம்பியனை வீழ்த்தியது மிகவும் பெருமையான தருணம். ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய சாதனை. நாங்கள் கடினமாக உழைத்து வந்ததற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

ஒரு சுழற் பந்துவீச்சாளராக பவர் பிளேவில் பந்து வீசுவது மிகவும் கடினம். ஆனால் நான் இதற்காக வலையில் பயிற்சி செய்து வருகிறேன். வெள்ளைப் பந்தில் தவறுகள் செய்வதற்கு இடம் கிடையாது. எனவே விக்கெட் டூ விக்கட்டுக்கு வீசினேன்.

பனி ஆட்டத்தில் ஒரு பங்கை வகிக்கும் என்று நாங்கள் நம்பினோம். எனவே நான் பவர் பிளேவில் பந்து வீச விரும்பினேன். பந்தில் சிறிது கிரிப் இருந்தது. பனி பெய்தாலும் கூட பந்து வீச நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். இதற்கென அதிகம் இடம் கொடுக்காமல் சரியான இடங்களில் வீச வேண்டும்.

நான் ஒரு பேட்டராக கீழ் வரிசையில் பங்களிக்க விரும்புகிறேன். இது எனக்கு அணி நிர்வாகம் தருகின்ற நம்பிக்கை. இதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். எங்கள் நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து தற்பொழுது வீடு திரும்பி இருக்கும் மக்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!