“மும்பையில மூச்சு விட முடியல.. காற்றை திங்கிற மாதிரி இருந்தது!” – ஜோ ரூட் புதிய குற்றச்சாட்டு!

0
1129
Root

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத விஷயமாக நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அரையிறுதிக்கு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறது.

உலகக்கோப்பையின் துவக்க போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி இடம் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து டெல்லியில் பேட்டிங் செய்யக்கூடிய சாதகமான ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலக்கை சேஸ் செய்ய முடியாமல், ஆப்கானிஸ்தான் அணிக்கு எந்த அழுத்தத்தையும் தராமல் எளிதாக தோல்வியடைந்தது.

இதற்கடுத்து மும்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 399 ரன்கள் விட்டுத் தந்ததோடு பேட்டிங் செய்ய வந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து பிரம்மாண்ட தோல்வியை அடைந்தது. இந்த காரணங்களால் தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி கட்டமைப்பை எடுத்துக் கொண்டால் டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. ஆனால் நீண்ட வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் இந்த அணி தாக்குப் பிடிப்பது கடினம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் அணுகுமுறை இதற்கு சரி வரவில்லை. மேலும் அவர்களது பந்து வீச்சு காம்பினேஷன் மிகவும் சுமாராக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஜோ ரூட் இந்த பிரச்சனையை எல்லாம் தாண்டி புதிய ஒரு பிரச்சினையை பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “மும்பையில் விளையாடியது போல நான் இதுவரை ஒரு சூழ்நிலையில் விளையாடியதே கிடையாது. வெளிப்படையாக சொல்வது என்றால் நான் அதிகம் வெப்பம் இருக்கும் மற்றும் ஈரப்பதம் இருக்கும் சூழ்நிலைகளில் விளையாடி இருக்கிறேன்.

ஆனால் மும்பையில் விளையாடும்போது எல்லாவற்றையும் தாண்டி மூச்சு விட சிரமமாக இருந்தது. அதாவது மூச்சு விட காற்றை தின்பது போல இருந்தது. இப்படித்தான் மைதானத்தில் நான் உணர்ந்தேன்.

நீங்கள் இதை ஹென்றி கிளாசன் விளையாடிய பொழுதும் பார்க்க முடியும். அந்த தட்பவெப்பநிலை அவரிடம் இருந்து எந்த அளவுக்கு ஆற்றலை உறிந்தது என்று புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் விளையாடி முடித்த பிறகு அவர் திரும்பவும் களத்திற்கு வரவில்லை.

அதாவது இந்த சூழ்நிலையில் இருந்து உங்களால் விலகிச் செல்ல முடியாது. நீங்கள் மைதானத்திற்குள் செல்கிறீர்கள் உங்கள் சட்டை வியர்வையால் நனைகிறது. மேலும் வழக்கத்தை விட உங்களுக்கு அதிகமான சுவாசம் தேவைப்படுகிறது.

நீங்கள் உடல் தகுதி உள்ளிட்ட விஷயங்களில் மிக கவனமாக எல்லாவற்றையும் செய்திருந்தும் கூட, உங்களால் அப்படியான சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியாமல் சிரமமாக இருப்பதை உங்களால் உணர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!