நான் சேவாக் பேட்டிங் பாத்து வளந்தவன்; நிதானம் அப்டின்ற பேச்சுக்கே இடமில்ல – இஷான் கிஷன் பேட்டி!

0
1026

நான் எனது சிறுவயதில் சேவாக் பேட்டிங்கை பார்த்து வளர்ந்திருக்கிறேன் என பேட்டியளித்துள்ளார் இஷான் கிஷன்.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறிய ரோகித் சர்மாவின் இடத்திற்கு துவக்க வீரராக உள்ளே வந்தார் இஷான் கிஷன்.

போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவானுடன் சேர்ந்து துவங்கினார். தன்னுடைய அதிரடியை ஆரம்பித்த இஷான் கிஷன், கடைசிவரை நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசிக் கொண்டிருந்தார்.

தனது முதல் சதத்தை அடித்த அவர் நிறுத்தாமல் அதை இரட்டை சதமாகவும் மாற்றினார். 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்த அவர், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் ஆவார். அதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சேவாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கின்றனர்.

இசான் கிஷன் ஆட்டம் இழந்தபோது இன்னும் 15 ஓவர்கள் மீதம் இருந்தது. சற்று நிதானமாக விளையாடி இருந்தால் அவரால் 300 ரன்கள் எட்டி இருக்க முடியும்.

இரட்டை சதம் அடித்த உடனேயே மீண்டும் அதிரடியாக விளையாட ஆரம்பித்து, சிக்சர் மற்றும் பவுண்டரி என 10 ரன்கள் அடித்தவுடன் ஆட்டம் இழந்துவிட்டார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்டபோது,

“நான் சிறுவயதிலிருந்தே சேவாக் பேட்டிங் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் ப்ரெட் லீ, சோயிப் அக்தர் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியதை பார்த்திருக்கிறேன். எனக்கும் அப்படியான அணுகுமுறை தான் பரிச்சயம்.

எனது ஹைலைட்ஸ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நான் ஆட்டம் இழந்தபோது, இன்னும் 15 ஓவர்கள் இருந்தது. நிதானமாக விளையாடி இருந்தால் முச்சதம் அடித்திருக்கலாம் என்று. எனது கையில் உள்ள மூட்டு பகுதிகள் ஏற்கனவே வழி எடுக்க ஆரம்பித்து விட்டன. உடனடியாக எவ்வளவு முடியுமோ அதை விரைவாக அடித்து விட்டு வெளியேறலாம் என நினைத்தேன். அதன் காரணமாகத்தான் இரட்டை சதம் அடித்த பிறகு நிதானம் காட்டாமல் விளையாடினேன்.” என்றார்.