என்ன நடந்துச்சுன்னு என்னால நம்பவே முடியல, ஆனால் நடந்து முடிஞ்சிருச்சு – கேஎல் ராகுல்!

0
561

இப்ப வரைக்கும் என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்து விட்டது தவறு எங்கே நடந்தது? யார் மீது தவறு? என்று காட்ட முடியாது. இரண்டு புள்ளிகளை இழந்து விட்டோம் என்று பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள், விருத்திமான் சகா 37 பந்துகளில் 47 ரன்களும் அடித்தனர்.

- Advertisement -

அடுத்ததாக பேட்டிங் செய்த லக்னோ அணி நன்றாக ஆட்டத்தை துவங்கியது. மேயர்ஸ் 24 ரன்கள், க்ருனால் பாண்டியா 23 ரன்கள் அடித்து கேஎல் ராகுலுடன் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுக்க, கேஎல் ராகுல் கடைசி ஓவர் வரை நின்று 68 ரன்கள் அடித்து தவறான நேரத்தில் ஆட்டம் இழந்ததால், அடுத்து வந்த வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி.

இதனால் கையில் இருந்த போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது லக்னோ அணி. போட்டி முடிந்த பிறகு இந்த தோல்வி குறித்து பேசிய கேஎல் ராகுல், “என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்து விட்டது. எங்கே தவறு நடந்தது என்பதை என்னால் குறிப்பிட முடியாது. இறுதியில் இரண்டு புள்ளிகளை இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை.”

“135 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எல்லாம் மிகச்சிறந்த விஷயம். 10 ரன்கள் குறைவாகவே கட்டுப்படுத்தி விட்டோம் என்று எண்ணினேன். பந்துவீச்சில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டு கொடுத்தார்கள். இது போன்ற முடிவுகள் அவ்வப்போது அமையும். அதற்காக வீரர்கள் தலைகுனிய வேண்டாம்.

- Advertisement -

இப்போதும் ஏழு போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் தவறான இடத்தில் இருந்தது வருத்தமளிக்கிறது. இருப்பினும் இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படுத்துவது தான் இது போன்ற தொடர்களில் அவசியம்.

நான் உண்மையில் போட்டியை கடைசி வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்று விளையாடுவதில்லை. என்னுடைய சில சாட்களை வெளிப்படுத்தினேன். எதிரணி பவுலர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள். நடுவில் இரண்டு மூன்று ஓவர்களை கட்டுப்படுத்தி மீண்டும் ஆட்டத்திற்கு வந்துவிட்டார்கள்.

ஆனால், விக்கெட்டுகள் கையில் இருந்ததால் இன்னும் கூடுதலாக பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மூன்று நான்கு ஓவர்கள் பவுண்டரிகள் அடிக்காமல் தடுமாறி விட்டோம். அதற்கு முன்பு வரை ஆட்டம் கையில் இருந்தது. நன்றாகவும் விளையாடினோம் எங்களது பவுலர்களுக்கு பாராட்டுக்கள்.” என்றார்.