“நான் ருதுராஜிடம் மன்னிப்பு கேட்டேன்.. ஜிம்மில் ஒரு முடிவு செய்தோம்..!” – ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் அசத்தல் பேச்சு!

0
26718
Jaiswal

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக ஜெயிஸ்வால் பேட்டிங் அமைந்தது.

இன்று விளையாடிய ஆடுகளம் முதல் 10 ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம். பந்து நின்று வந்ததோடு நன்றாக திரும்பவும் செய்தது. மேக்ஸ்வெல் பந்து வீசும் பொழுது அதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் போட்டியில் ருதுராஜ் ஒரு பந்து கூட விளையாடாத நிலையில் ஜெய்ஸ்வாலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இன்று இதை மறந்து இந்த ஜோடி களம் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடியது.

குறிப்பாக ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இல்லாத நிலையில், இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியில் மிரட்டினார். பவர் பிளே முடிவதற்குள் 5.4 ஓவரில் 24 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் என அரைசதம் அடித்து மிரட்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமும் இழந்தார். இந்திய அணி 235 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா அணியை 191 ரன்களில் மடக்கி, 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்படி பேட்டிங் செய்ய கடினமான முதல் பத்து ஓவர்களில் ஜெய்ஸ்வால் அதிரடியாக குவித்து தந்த ரன்கள்தான், பனிப்பொழிவு வந்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை நிலவிய பொழுது, அதைத் தாண்டி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “இந்த போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்தது. நான் அனுபவித்து விளையாடினேன். நான் என்னுடைய ஷாட்களை பயமின்றி விளையாட சூர்யா பாயும் லட்சுமணன் சாரும் ஆதரவு கொடுத்து இருந்தார்கள்.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் சுற்றி இருக்கும் பொழுது அதை வைத்து என்னை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று நான் எப்பொழுதும் யோசிப்பேன். இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கடந்த ஆட்டத்தில் ருத்ராஜ் ரன் அவுட் ஆனது என்னுடைய தவறுதான். நான்தான் அவரை இரண்டாவது ரன்னுக்கு அழைத்தேன். அப்போது எனக்கு இரண்டாவது ரன் உறுதியாக தெரிந்தது. ஆனால் அடுத்து எனக்கு நடுவில் ஸ்டாய்னிஸ் இருந்தார். இதனால் எனக்கு அப்பொழுது புரியவில்லை.

நான் பிறகு ருதுராஜிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அவர் மிகவும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். பிறகு ஜிம்மில் இருக்கும் பொழுது நாங்கள் சரியான பாதுகாப்பான சிங்கிள் ரன்களை எடுப்போம் என்று அவர் என்னிடம் கூறினார்.

எனது உடல் தகுதி மற்றும் என்னுடைய ஷாட்களை விளையாட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் பொழுது மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் முக்கியமானதாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!