15 வருஷத்துக்கு முன்னாடி பண்ணதுக்கு இப்பவும் நான் பீல் பண்ணிட்டு இருக்கேன்; அந்த தப்பை நீங்க பண்ணீராதீங்க – ஹர்பஜன் சிங் விராட் கோலிக்கு அறிவுரை!

0
1018

2008 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே நடந்த விஷயத்திற்கு இன்றளவும் வருத்தப்பட்டு வருவதாகவும், விராட் கோலி கம்பீர் இருவரும் அதுபோன்ற ஒரு தவறை செய்து விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது நடந்த சலசலப்பில் ஹர்பஜன் சிங் பவுலர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்துவிட்டார்.

- Advertisement -

அந்த நிகழ்வு இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஹர்பஜன்சிங் பெயரை எடுத்தாலே இந்த சம்பவம் பலரின் நினைவுக்கு வந்து செல்லும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது.

இந்நிலையில் லக்னோ மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மற்றும் கம்பீர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட அடிதடி வரை செல்லும் அளவிற்கு இருவரும் கோபத்துடன் காணப்பட்டனர். பல வீரர்கள் நடுவில் வந்து இருவரையும் தடுத்து தனித்தனியே அழைத்துச் சென்றதால் பிரச்சனை சற்று அமைதியாகியது.

இது முதல்முறையல்ல, கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் போட்டிக்கு நடுவே கம்பீர் மற்றும் விராட் கோலி மோதிக்கொண்டனர்.

- Advertisement -

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு நான் செய்த தவறை நீங்கள் செய்துவிடவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங். அவர் பேசியதாவது:

“15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து நான் இன்றளவும் வருத்தப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் ஒருமுறை செய்திருப்பீர்கள். ஆனால் மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதை தொடர்ந்து பேசி ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பதை மீண்டும் மீண்டும் விவாதித்து வரலாற்றில் இருந்து மறையாத சம்பவமாக மாற்றிவிடுவார்கள்.

எங்கு சென்றாலும் அதைப் பற்றியே பேசி தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். நான் செய்த தவறை நீங்களும் செய்து விட வேண்டாம். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சீனியர் வீரர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். நீங்களே இளம் வீரர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருந்து விடாதீர்கள்.” என்று பேசி உள்ளார்.