பிசிசிஐ வாய்ப்பு வரும்ன்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுத்துட்டேன்; வெளிநாட்டு வாய்ப்பு தேடப்போகிறேன் – வருத்தமாக பேசிய தமிழக வீரர்!

0
1031

பிசிசிஐ வாய்ப்பு வரும் என்று காத்திருந்து வெறுத்து விட்டேன் என மனமுடைந்து பேசியுள்ளார் தமிழக வீரர் முரளி விஜய்.

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வந்த முரளி விஜய் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் கடைசியாக விளையாடினார். அதன்பின் 2021 ஆம் ஆண்டு சையது முஸ்தக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதுடன் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவதை நிறுத்திவிட்டார். போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட நான்காயிரம் ரன்களும், தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களும் அடித்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரில் மறக்க முடியாத ஆட்டத்தை துவக்க வீரராக வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் விராட் கோலி மோசமாக விளையாடினார் என்று பேசப்பட்டதே தவிர, முரளி விஜய் அபாரமாக செயல்பட்டது பேசப்படவில்லை.

- Advertisement -

துவக்க வீரராக களமிறங்கி 5 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட பந்துகளை பிடித்து, கணிசமான ரன்களையும் அடித்து இந்தியாவை படுதோல்வியில் இருந்து மீட்டார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் கிடைத்து வந்தது. 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து வாய்ப்புகள் வருவதில்லை. இதன் காரணமாக மனமுடைந்து பேசியிருக்கிறார் முரளி விஜய்.

அவர் பேசியதாவது:

“பிசிசிஐ வாய்ப்புக்காக காத்திருந்து நான் வெறுத்து விட்டேன். இனி வெளிநாடுகளில் ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது குறித்து விசாரித்து வருகிறேன்.”

“30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் பல ஜாம்பவான்கள் 30 வயதிற்கு மேல் தான் தங்களது உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். வீரரின் மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டும் முக்கியம். அதை மட்டுமே கவனிக்க வேண்டுமே தவிர வயது என்பது இரண்டாம் பட்சம் தான். கிரிக்கெட் குறித்து வெறுப்பு அடைந்து விட்டேன். இனி நம் கையில் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவு செய்து, வெளிநாடுகளில் ஒரு சில வாய்ப்புகள் வருகிறது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் நன்றாக விளையாட முடியும். ஆகையால் அந்த வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள பார்க்கிறேன்.” என்றார்.