முதல் ஐபிஎல் சதம் அடித்துவிட்டு, இப்படி தோல்வி அடைவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! – எய்டன் மார்க்ரம்!

0
437

“கிளாசன் சதமடித்துவிட்டு தோற்போம் எனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தோல்வி அடைந்தாலும், அவர் ஆடிய விதத்தினால் மகிழ்ச்சியாக செல்கிறேன்.” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஆர்சிபி அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இன்னும் எளிதாகிவிடும் என்கிற கோணத்திலும் களமிறங்கியது.

- Advertisement -

முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஹென்றிச் கிளாஸன், அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். ஹைதராபாத் அணி 186 ரன்கள் சேர்த்தது.

இந்த இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு டு பிளசிஸ மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த விராட் கோலி 62 பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் இழந்தார். டு பிளசிஸ் 71 ரன்கள் விளாசினார்.

19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றமும் கண்டது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், “நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பவர்-பிளே ஓவர்களில் குறைவான ரன்களை அடித்து விட்டோம். ஆனாலும் கிளாசன் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். நாங்கள் அடித்த ஸ்கோர் எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கோர் தான். பந்துவீச்சில் சோதப்பினோம். தோல்வி அடைந்தது சற்று வெறுப்பை உண்டாக்குகிறது.

இன்று மைதானத்தில் ரசிகர்கள் சப்போர்ட் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக ஆர்.சி.பி அணிக்கு அதிகமாகவே இருந்ததாக பார்க்கிறேன். முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் தொடரை புன்னகையுடன் முடிப்போம்.

இன்று டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடிய விதம் மொத்தமாக ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்தது. சரியாக திட்டமிட்டு உள்ளே வந்தோம். ஆனால் அதை செயல்படுத்த தவறிவிட்டோம். இன்றைய போட்டியில் கிளாசன் பேட்டிங்கில் சிறப்பாக கலக்கினார். மற்ற சில வீரர்கள் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டனர்.

முதல் ஐபிஎல் சதத்தை அடித்துவிட்டு அந்த போட்டியை இழப்போம் என்று கனவிலும் கிளாசன் எதிர்பார்த்திருக்க மாட்டார். போட்டியை இழந்ததில் வருத்தம் அளித்தாலும் கிளாசன் ஆடிய விதத்திற்கும் மற்ற சில வீரர்கள் செயல்பட்ட விதத்திற்கும் மகிழ்ச்சியுடன் செல்கிறேன்.” என்றார்.