என் வேலையை இந்த 3 பேர் ஈஸியா மாத்திடறாங்க.. வெட்டேரி எடுத்த அந்த முடிவு தான் வெற்றிக்கு காரணம் – பாட் கம்மின்ஸ் பேச்சு

0
1017
Cummins

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி அதிரடியாக 15 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். நடுவில் விக்கட்டுகள் விழுந்த காரணத்தினால் பொறுமையாக விளையாடிய ஹென்றி கிளாசன் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு போராடி 175 ரன்கள் சேர்த்தது. போல்ட் பவர் பிளேவிலேயே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தேவையை உணர்ந்து அதிரடியாக விளையாடி 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. ஹைதராபாத் அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் ஷாபாஷ் அகமத் 3 மற்றும் அபிஷேக் ஷர்மா 2 விக்கெட் கைப்பற்றி ராஜஸ்தான் அணியை சரித்து விட்டார்கள்.

கடைசிக் கட்டத்தில் இளம் வீரர் துருவ் ஜுரல் தனியாக போராடி 35 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும் பொழுது “அணி வீரர்கள் எல்லா நேரத்திலும் சிறப்பாக இருந்தார்கள். எங்கள் அணிக்குள் ஒரு நல்ல அதிர்வு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். பைனல் செல்வது எங்கள் இலக்காக இருந்தது அதை செய்திருக்கிறோம். எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பதை அறிந்தோம். மேலும் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை குறைத்து மதிப்பிட மாட்டோம். புவி, நட்டு மற்றும் உனட்கட் என்னுடைய வேலையை எளிதாக்கி விடுகிறார்கள். ஷாபாஷ் அகமதை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வருவது பயிற்சியாளர் வெட்டேரி முடிவு. அவர் இடது கை சுழல் பந்துவீச்சாளரை விரும்பினார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு இவங்கள நினைச்சு பெருமைதான்.. ஆனா இந்த ஒரு விஷயம் எங்களை தோற்கடிச்சிடுச்சி – சஞ்சு சாம்சன் பேட்டி

அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா ஆச்சரியமான விஷயம். அவர் சிறப்பாக பந்து வீசினார். இரண்டு விக்கெட் களை சீக்கிரத்தில் பெற்றால் 170 ரன்கள் துரத்துவதற்கு கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ஆடுகளங்கள் கொடுக்கப்படுகின்றன. நான் முன்கூட்டியே ஆடுகளம் தொடர்பாக எதை முடிவு செய்வது இல்லை. மேலும் இந்த அணி நிர்வாகத்தில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.