நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அந்த அணி நுழைந்ததில் கேப்டன் பாட் கம்மின்ஸ் பங்கு பெரிய அளவில் இருப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் சைமன் ஹெல்மட் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இரண்டாவது பந்து வீசும் பொழுது ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி எட்டு ஓவர்களுக்கு 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்கள்.
இந்த போட்டியில் கம்மின்ஸ் ஷாபாஷ் அகமதை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. எனவே அவரை கொண்டு வந்தார். அவருடைய பந்துவீச்சுக்கு ஆடுகளம் உதவி செய்வது தெரிந்ததும், கொஞ்சமும் யோசிக்காமல் அபிஷேக் ஷர்மாவையும் கொண்டு வந்தார். அவருடைய இந்த முடிவு தான் மிகச் சிறப்பானதாக எல்லோரும் பாராட்டப்படுகிறது.
இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் பேசும்பொழுது “கம்மின்ஸ் மிகவும் பிராக்டிக்கலான, பணிவான ஒரு நபர். சக அணியினர் மற்றும் பயிற்சி ஊழியர்களிடம் அவர் மிகவும் அன்புடன் இருப்பார். புள்ளி விபரங்களை தேடி வைத்துக் கொள்வார். எதிரணியினர் பற்றிய முழு விபரங்களையும் அவர் வைத்திருப்பார். அவர் எப்பொழுதும் நேரத்தை வீணாக்குவதே கிடையாது. எங்களுடைய டீம் மீட்டிங் கடைசியாக 35 நொடிகள் மட்டும்தான் நடந்தது.
இருந்தாலும் கூட தேவையான எல்லா விஷயங்களும் ஏற்கனவே பேசப்பட்டு இருக்கின்றன. எங்களுடைய பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருவரும் நிறைய கலந்தாலோசனை செய்யக் கூடியவர்கள். மேலும் தேவையான சமயத்தில் குழு கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால் நாங்கள் எந்த நாளும் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம்.
இதையும் படிங்க : ஒரே நாள்தான் இருக்கு.. அபிஷேக்க டி20 உ.கோ இந்திய டீம்ல சேருங்க.. இவரை தூக்கிடுங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை
நேற்று சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய பெருமை எங்கள் கேப்டனுக்கு சேரும். அவர் சூழ்நிலையை மிக அற்புதமாக உணர்ந்து அவர்களிடம் இரண்டு வலது கை பேட்ஸ்மேன் இருந்ததால் அபிஷேக் சர்மாவையும் கொண்டு வந்தார். இது அற்புதமான முடிவு. கம்மின்ஸ் மற்றும் பயிற்சியாளர் வெட்டேரி நல்ல உறவைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை நாம் பார்த்து இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.