இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு மெக்ராத் ஆலோசனை!

0
154
McGrath

2000 ஆம் ஆண்டு காலத்தில் ஆஸ்திரேலிய அணி பெரிய அசுர வளர்ச்சி கண்டிருந்தது. உலகத்தில் எந்த நாடுகளையும் எந்த நாட்டிலும் வைத்து வீழ்த்த கூடிய திறமை அந்த அணிக்கு இருந்தது. அந்த அணியில் இடம் பெறும் 11 வீரர்களுமே ஆட்டத்தை வெல்லக்கூடிய மேட்ச் வின்னர்களாக இருந்தனர்.

ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி என்பது எல்லா அணிகளுக்குமே சிம்மசொப்பனம் என்பதை தாண்டி, பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் சோகத்திற்கு காரணமான அணி. அவர்களை வெல்வது என்பது உலக ஆச்சரியங்களில் ஒன்றான செய்தியாகத்தான் அப்போது இருந்தது.

- Advertisement -

ஆனாலும் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியும் 2000 ஆண்டில் இந்தியா வந்தபொழுது, கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் 2-1 என வீழ்த்தி வழியனுப்பி வைத்தது. தாக்குதல் பாணி ஆட்டத்தை மட்டுமே ஆடிவந்த ஆஸ்திரேலியா அந்த தோல்விக்குப் பிறகுதான் தற்காப்பு ஆட்டத்தையும் விளையாடியது என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் பின்னொரு நாளில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்து வெல்வது மிகப்பெரிய கடினமான காரியம். 2004ஆம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி இத்தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்று இருந்தது. அதற்குப் பிறகு அவர்களால் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்திய அணி இந்த இடைப்பட்ட காலத்தில் சமீபத்தில் கடந்த இரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணங்களில் இரு டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியாவில் வென்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது ஆகும். எனவே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீச வேண்டுமென ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் ஆலோசனை தெரிவித்து உள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வென்ற ஆஸ்திரேலிய அணியில் கிளன் மெக்ராத் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சொந்த நாட்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதுபற்றி பேசி உள்ள மெக்ராத் ” வெளிப்படையாகச் சொல்வதென்றால் இந்த தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால் நல்ல திட்டங்களோடு அங்கு போகவேண்டும். பேட்ஸ்மேன்கள் அங்குள்ள சூழல் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப பந்து வீச வேண்டும்” என்று தெரிவித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். அடுத்து இலங்கை அணியுடனான தொடரிலும் நன்றாகவே விளையாடினார்கள். ஆசிய கண்டத்தில் விளையாடும் சூழ்நிலையை கற்றிருக்கிறார்கள். ஆனாலும் இந்தியா இதில் ஒரு இறுதி சவாலாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. அவர்கள் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க தயாராகவே இருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இந்திய மைதானங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள மெக்ராத் அதில் ” புதிய பந்தில் நிறைய விக்கட்டுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். பந்து தேய்ந்து மென்மையான பிறகு விக்கெட் எடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பந்தை நீங்கள் நேராக வீசலாம். மேலும் ஒரு ரிங் பீல்ட் அமைத்து வியூகம் அமைப்பது பேட்ஸ்மேன்களுக்கு ரன் எடுப்பதை கடினமாக்கும். இப்படியான தெளிவான திட்டங்கள் இருக்க வேண்டும் இந்தத் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு பயனளிக்கக் கூடியது” என்றும் கூறியிருக்கிறார்!