சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த இலக்கை இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து சேஸ் செய்திருக்கிறது. அபாரமாக ஆடி விராட் கோலி சதம் அடித்திருக்கிறார்.
இதன் காரணமாக சொந்த மண்ணில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே வெளியேறும் எல்லைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்திய அணிக்கு எதிரான 2வது லீக் போட்டியிலும் தோல்வியடைந்திருக்கிறது.
பாகிஸ்தான் ரன் ரேட்
இதனால் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து உள்ளதால் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் -1.087ஆக இருக்கிறது. இருந்தாலும் பாகிஸ்தான் அணி முழுமையாக தொடரில் இருந்து வெளியேறிவிடவில்லை. இன்னும் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் விளையாட உள்ளது.
அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றியை பெற்று நெட் ரன் ரேட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும். அதேபோல் நியூசிலாந்து அணி அடுத்ததாக வங்கதேசம் அணி மற்றும் இந்திய அணியுடன் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுடனும் நியூசிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டும்.
அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
இப்படி நடந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளின் புள்ளிகளும் 2ஆக இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் யார் என்பது முடிவு செய்யப்படும். அப்போது வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளின் ரன் ரேட்டை விட பாகிஸ்தான் நல்ல ரன் ரேட் வைத்திருந்தால், பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
ஆனால் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்துமா என்பது சந்தேகம்தான். ஏற்கனவே சில நேரங்களில் நியூசிலாந்துக்கு வங்கதேசம் அதிர்ச்சி கொடுத்திருந்தாலும், ஐசிசி தொடர்களில் அவ்வாறு நடப்பது எளிதல்ல. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 100 சதவீதம் அதிர்ஷ்டம் இருந்தாலும் வாய்ப்பு உள்ளது.






